Tuesday 30 September 2014

இந்து சமயம்-அறிந்து கொள்ளுங்கள்--6 29/09/2014.

இந்தோ-ஈரானியர்கள் : இந்திய -ஐரோப்பியக் கலாச்சாரம், தனக்குள் பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்டுள்ளது. அவை, இந்தோ-ஈரானியம், இந்தோ-ஆர்யம்,ஆர்யம் என்று பிரிகின்றன.இவற்றின் தலைப்பிற்கேற்ப சிறிய குறிப்புகளாக விளக்க முற்படுகிறேன்.இந்தொ-ஈரானியர்கள் என்று அழைக்கப்
படுபவர்கள்,யூப்ரடீஸ்-டைகிரீஸ் நதி சார்ந்து வாழ்ந்தமக்கள் என்று முன்னரே
அறிந்துள்ளோம்.இந் நாகரீகத்தின் எல்லைப் பகுதிகளாக வடக்கே அனடொலியன் பீடபூமியும்,தெற்கே பாரசீக வளைகுடாவும்,மேற்கே அரேபிய- சிரியா பாலைவனப் பகுதிகளும்,கிழக்கே ஈரானிய பீடபூமிகளாகவும் இருந்துள்ளன. இக்கலாச்சாரம்(நாகரீகம்) கி.மு.6000 ல் தோன்றியதாகும். அதனால் கிறிஸ்து பிறப்பு வரையிலான 6000 ஆண்டுகள் இடைவெளியில் இப்பகுதியில் வாழ்ந்த மக்களை பல்வேறு பெயர்களில் அழைத்துள்ளனர். அவற்றில் சுமேரியம்,மெசபதோமியம்,அக்கேடியம்,அசீரியம்,பாபிலோனியம், சால்தியம் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாக இருந்துள்ளன.
சுமேரியம் ; கி.மு.6000க்கு முன்னர் வாழ்ந்த உலகத்தின் தொன்மையான கலாச்சாரத்தின் பட்டியலில் இடம் பெற்றவராவர். இயற்கை வழிபாடுகளும்,உருவவழிபாடுகளும்,சூரியன் போன்ற கோள்கள் வழிபாடுகளும் செய்துள்ளனர். இனக்குழுவாக வாழ்ந்த அமைப்பு படிப்படியாக வளர்ச்சியடைந்து பெரிய கூட்டமாக மாற்றி அமைக்கப்பட்டன. அவற்றிற்கு தலைமையாக அரசர் போன்ற அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டன. அந்த அரச கூட்டத்தினர்க்கு என்று புதிய கடவுள்களும், வழிபாடு செய்வதற்குரிய விதிகள், கட்டமைப்புகள் போன்றவையும் எற்படுத்தப்பட்டன. இவ்வாறு காலத்திற்கேற்ப பல கடவுள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இவர்களுக்குப்பின்னர் இப்பகுதியில் வாழ்ந்த மக்களையும்,அவர்களின் வாழ்வியல் கலாச்சாரத்தையும் இனணத்து பல பெயர்களில் அழைத்துள்ளனர்.
மெசபதோமியநாகரீகம் (கி.மு.3000), அசீரிய நாகரீகம் (கி.மு.2000),பாபிலோனிய நாகரீகம்(கி.மு.1800) என்ற பெரிய நாகரீகங்கள் ஏற்பட்டுள்ளன.இந்நாகரீகங்கள் அனைத்திலும் காலத்திற்கேற்ப கடவுள்கள், வழிபாடுகள் மாறிக்கொண்டே வந்துள்ளன. வானத்தில் உள்ள நட்சத்திரங்கள்,கோள்கள் ,கிரகணகால நிலைகள் போன்றவற்றை தொடர்ச்சியாக ஆய்வு செய்துள்ளனர். அதனடிப்படையில் உலகின் வானசாத்திரம், சோதிடசாத்திரத்திற்கு பெரிதும் துணை புரிந்துள்ளனர். வானசாத்திரமும், சோதிடசாத்திரமும் இவர்களின் கண்டுபிடிப்பு ஆகும். பல நூற்றாண்டுகள் தொடர்ச்சியான வானசாத்திரம்,சோதிட சாத்திரக் கண்டுபிடிப்புகள் பாபிலோனியப்பேரரசின் வீழ்ச்சிக்குப்பின்னர்(கி.மு.500) கிரேக்கத்தில் வளர்ச்சியடையத் தொடங்கின. கிரேக்கத்தின் வளர்ச்சியடைந்த வானசாத்திர ஆய்வுகளினால் வானத்தில் உள்ள இராசி மண்டலத்திற்கு கிரேக்க மொழியில் பெயர்கள் சூட்டப்பட்டன. இவ்வாறு ஒரு பக்கம் வானசாத்திரம்,சோதிடசாத்திரம் வளர்ச்சியைப்பெற்றன.
இங்ஙனம் வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடையேதான் கி.மு3000க்கு முன்னர் இந்திய ஐரோப்பியர்கள் குடிபெயர்ந்தனர். இக்குடிபெயர்ப்பில்,இங்குள்ள கடவுள்கள், இறை வழிபாடுகள் கட்டமைப்புகளுடன் ஒன்று பட்டுள்ளனர். கி.மு.2500க்குப் பின்னர் சிந்து சமவெளி நாகரீகத்திற்கு ஒருபிரிவினர் குடி பெயர்ந்தனர். இவர்களை இந்தோ-ஆரியர் என்று அழைக்கப்பட்டனர்.