VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

Friday 13 February 2015

பழமொழிகளும் ----- சோதிடமும் 13-02-2015


பழமொழிகளும் -----   சோதிடமும்

அன்பானவர்களே !!!!!! திரும்பவும் தங்களை எனது பிளாக்கில் வரவேற்கிறேன்….

சோதிடத்தில் பழமொழிகளைக் கூறி பல மனிதர்களின் நம்பிக்கைகளை தகர்ப்பதை இன்றும் காணமுடிகிறது…. பழமொழிக்கும் சோதிடத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. அப்படியிருக்க எப்படி சோதிடத்தில் பழமொழிகள் வந்திருக்கும் என்ற வினா எழுகிறது அல்லவா!!!!. இதை ஆய்வுக்கு உட்படுத்தினால் பல உண்மைகள் ஆய்வரங்கத்திற்குள் வந்து விடும்.. ..அதையும் வரவேற்போம்….

” ஜென்ம குரு வன வாசம்”  என்று ஒரு பழமொழி……… உள்ளது….

அதாவது பிறக்கும் பொழுதோ அல்லது கோச்சாரத்தில் ஒருவருடைய இராசிக்கு குரு மாறிவந்தால்,,அந்த இராசிக்காரக்கு நிலையற்ற தன்மை ஏற்பட்டு துன்பப்படுவார் என்ற கருத்தில் கூறப் படுவதாகும்… இக்கருத்து உண்மையில் சரிதானா??? 

 இராமாயணத்தில் இராமருக்கு சாதகக் கட்டம் போட்டு கோள்களின் நிலைகளைக் குறித்து உள்ளார்கள். அதில் இராமரின் இராசி கடகம் என்றும் அதில் கூடவே குருக் கோள் உச்ச நிலையில் இணைந்திருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கும். பிறக்கும் பொழுது அச்சாதகத்தில் குரு இணைந்திருப்பதைக் கொண்டு அவர் வனவாசத்தில் துன்பப்பட்டதை வைத்து பழமொழி கூறியிருக்கலாம்……அல்லது இராமாயணக் கதையின் படி இராமர் பிறந்து பன்னிரெண்டு வயதில் அரக்கியை அழிக்க வனத்திற்கு செல்கிறார்..அப்பொழுது ஒரு வனவாசம் நடைபெறுகிறது..அரக்கியை அழித்தவுடன் இராமருக்கு திருமணமும் நடைபெற்று மனைவியுடன் அரண்மனை திரும்புகிறார்.. அச்சமயத்தில் கோச்சாரக்க்குரு கடகத்தில் இருக்கும். அதற்காகக் கூறலாம்….

பின்னர் பன்னிரெண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் கதைப்படி இராமரின் வயது 24 ல் மனைவியுடன் வனவாசம் செல்கிறார்.. இப்பொழுதும் கோச்சாரக் குரு கடக இராசியில் இருந்திருப்பார். அதைக்கொண்டும் பழமொழி கூறியிருக்கலாம். ஆனால் நான் இராமரின் வயதை வைத்துக் கூறியது எத்தனை நபர்களுக்குத் தெரிந்திருக்கும் என்று தெரிய வில்லை…இருப்பினும் இந்த பழமொழியை தோற்றுவித்த சோதிடர்க்கு தெரிந்திருக்குமா என்றும் கருத முடியவில்லை….

எப்படியிருப்பினும் இந்த பழமொழி தவறானதாகும்…….. இராமருடன் மற்ற மூவரும் இதே இராசியில் பிறந்துள்ளனர்…. வால்மீகி இராமயணப்படி பரதன் பூசம் நட்சத்திரத்திலும்,,,இலக்குவனும்,சத்ருக்கனும், ஆயில்ய நட்சத்திரத்திலும் பிறந்துள்ளனர். எனும் பொழுது இராமரும், இலக்குவனும் வனத்திற்கு செல்ல ,,,,,,பரதனும் ,சத்ருக்கனும் நகரத்திலேயே வாழ்ந்துள்ளனர். எனும் பொழுது ஜென்ம குரு வனவாசம் என்பது இங்கு அனைவருக்கும் நடைபெறவில்லை என்பது தெளிவாகிறது… எனவே ஒரு இராசியை வைத்துக்கூறும் பழமொழிகள் அனைவருக்கும் தீமையோ அல்லது நற்பலன்களோ ஏற்பட வாய்பில்லை..அவை பொதுவான பழமொழிகளே தவிர வேறொன்றுமில்லை….

” சித்திரை அப்பன் தெருவிலே “ இப்படியும் ஒரு பழமொழி உள்ளது…..


இதுவும் இராமாயணக் கதையைக் கொண்டு ஏற்படுத்தப் பட்டதாகும்…. அதாவது இராமர் பிறந்தது சித்திரை மாதமாகும்.  இராமர் வனத்திற்கு சென்ற பின்பு மயக்கம் தெளிந்து எழுந்த அவருடைய தந்தை தசரதன் இராமா ,இராமா,என்று கதறிக் கொண்டே அரண்மனைத்தெருவில் வந்து உயிர் விட்டதாக கதை சொல்கிறது. இதன் அடிப்படையில் ஏற்படுத்தப் பட்ட பழமொழியாகும்.. இதுவும் தவறானதாகும்.. சித்திரை என்கிற மாதத்தில் உலகத்தில் உள்ள பன்னிரெண்டில் ஒரு பங்கினர் பிறந்துள்ளனர். அவர்களுடைய தந்தையெல்லாம் இந்த துன்பமா அனுபவிக்கின்றனர்….

அக்காலங்களில்சித்திரையின்கொடியவெயிலில்குழந்தைபிறந்தால்,தாயிற்கும், குழந்தைக்கும் ஆகாது என்று பிறப்பையே தள்ளி வைத்தனர்.. இந்த கருத்தின் அடிப்படையில் கூறினாலும் …தந்தைக்கு எப்படி தீங்கைக்கூறுவது,,,,, எனவே இந்த பழமொழியும் தவறானதாகும்……

 “பூராடம் நூலாடாது “  பாவம் இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு தாலிக்கயிறு நிலைக்காது என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்ட பழமொழியாகும்… 


இப்பேர்பட்ட வக்ர புத்தியுள்ள சோதிடப் பழமொழிகளால் சோதிடத்திற்கு தான் கேடு… பொதுவாக ஒரு நட்சத்திரத்தில் எத்தனையோ கோடிக்கணக்கில் பெண்கள் பிறந்துள்ளனர்… அவர்களை பழமொழியால் பழிப்பது எத்தனை பெரிய பொய்யாகும்… என்னமோ பூராடத்திற்கு மட்டும் கணவர் இறப்பாராம்.. மற்ற நட்சத்திரப் பெண்களெல்லாம் ,,அப்படியே கணவருடன் வாழ்வது மாதிரியாக அல்லவா உள்ளது….
உண்மையில் இவ்வாறு பொய்யான பழமொழிகளுடன் கூடிய சோதிடங்களையும், சோதிடர்களையும் தவிர்க்க வேண்டும்…..

”அவிட்டம் நட்சத்திரம் தவிட்டுப் பானையெல்லாம் தங்கம்”


வறுமைக் கோட்டில் வாழும் அவிட்ட நட்சத்திரங்களை என்ன செய்வது . பொதுவாக பல இலட்சம் மக்கள் ஒரு நட்சத்திரத்தில் பிறக்கின்றனர்…எனும் பொழுது அவர்கள் அனைவரும் ஒன்று போல் வாழ்வது இல்லை. எனவே இந்தக் கூற்றையும் எப்படி ஏற்றுக்கொள்வது…..

”பரணி தரணி ஆளும்”

எத்தனையோ பரணிகள் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கின்றன… அதாவது வறுமைக்கோட்டிற்கும் கீழே வாழ்கின்றனர்……..


” வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை வீட்டிற்கு ஆகாது..


வாரத்திற்கு மொத்தமே ஏழு நாட்கள் தான்… வெள்ளிக்கிழமையில் மட்டும் ஏறத்தாழ 50 கோடி ஆண்கள்  பிறந்து உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்…. இவர்களை எல்லாம் என்ன செய்வது……..

”உத்திரத்தில் ஒரு பிள்ளை ஊர் கோடியில் ஒரு காணி நிலம்”

உத்திர நட்சத்திரத்திற்கு ஒரு சிறப்பு பலன் கூறியுள்ளார்கள்… இதுவும் இராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டதாகும்.. இராமர்- போருக்கு செல்வதற்கு தனது பிறந்த நட்சத்திரமான புனர்வசுவில் இருந்து ஆறாவது நட்சத்திரமான உத்திரத்தை தேர்ந்தெடுத்து வெற்றியும் பெறுகிறார். எனவே இதன் அடிப்படையில் கூறப்பட்ட பழமொழியாகும்… ஆனால் இங்கு பிறந்தவர்களுக்கு நல்லது என்று உள்ளது…

இவை போல் சோதிடத்தில் புராணக்கதைகளின் அடிப்படையில் பொதுவான பலன்களுடன் கூடிய  பழமொழி சோதிடப்பலன்கள் அங்கங்கு கூறப்படுகின்றன.. இவற்றிற்கும் மானுட வாழ்விற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.. ஆனால் பிறந்த சாதகத்திற்கும் மானுட வாழ்விற்கும் அதிக தொடர்புகள் உள்ளன. எனவே பொது மக்கள் சோதிடப் பழமொழிகளை நம்பாமல் , அனைத்துப் பலன்களையும் சாதக ரீதியாக கேட்டுக் கொள்ள வேண்டும்.. பழமொழிகளைக் கூறி பயமுறுத்தும் சோதிடரை முற்றிலும் தவிர்க்க வேண்டும்…

குறிப்பு : உண்மையைக் கூறுவதற்கு யாரும் முன் வராததால் நாங்கள் கூறிக் கொண்டிருக்கிறோம்… தமிழக சோதிட உலகில் நாங்களாவது இப்படி இருந்து விட்டுப் போகிறோமே …… அதில் உங்களுக்கு என்ன வருத்தம்…
முடிந்தால் எங்களுடன் சேர்ந்து நீங்களும் எழுதுங்கள்.. வரவேற்கிறோம்…..

மிக்க நன்றி…..

Professor . Vimalan.       13-02-2015.


Sunday 8 February 2015

சோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். .... 08-02-2015...



சோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன்.
கோ.ஜெ.பத்ரி நாராயணன்.
”இயற்கை சீற்றங்களின் அச்சத்தினால் பண்டைய கால மானுடம் கண்டுபிடித்ததே இறைவனும், அதற்குரிய கோட்பாடுகளும் ஆகும். இந்த இறைக் கோட்பாடுகள் உருவாக்கப் பட்டதாலேயே மானுட வாழ்வு நாகரீகமானதாக உருவெடுத்துள்ளது. அந் நாகரீகத்தின் அடிப்படையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மானுடம் பல்வேறு நம்பிக்கைகளை ஏற்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறது.. அவ்வாறு ஏற்படுத்திக் கொண்ட நம்பிக்கைகளில் ஒன்றுதான் சோதிடம் பார்ப்பதாகும். சோதிடத்தின் மூலமாக தங்களது எதிர்காலத்தை அறிந்து அதன்படி வாழ்க்கையை நடத்திக் கொண்டு பல மானுடர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சோதிடப் பலன்கள் விண்ணில் உள்ள கோள்களையும்,விண்மீன்களையும் அடிப்படையாகக் கொண்டதாகும். எனவே இக்கலைக்கு அடிப்படையாக வானசாத்திரம் உள்ளது. இந்த வானசாத்திரம் அறிவியலை அடிப்படையாகக் கொண்டதால், சோதிடம் அறிவியலாகிறது. எப்பொழுது சோதிடம் அறிவியலைச் சார்ந்துள்ளதோ அப்பொழுதே இங்கு ஆன்மீகத்திற்கு இடமில்லாமல் போய்விடுகிறது. ஆதலால் ஆன்மீகம் வேறு, சோதிடம் வேறு என்ற கோட்பாடுடையவனாகவே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இவ்வாறு எனது முடிவை நனவாக்கிய பெருமையுடையவர் ஒருவர் உண்டென்றால் அவரே தமிழகத்தின் முதல் சோதிடவியல் துறைப் பேராசிரியர் முனைவர் தி. விமலன் அவர்கள் ஆவார்கள். “
முனைவர் தி.விமலன் அவர்கள் கி.பி. 1962 ஆம் ஆண்டு சனவரி திங்கள் 10 ஆம் நாள் காலை 05 மணி 55 நிமிடங்களுக்கு மதுரையில் பிறந்துள்ளார். இளமைக்காலங்களில் பள்ளிப்படிப்பை முடித்தவர் ,அதன் பின்னர் மதுரை காமராசர் பல்கலையில் சோதிடவியல் பட்டயப்படிப்பும், வடமொழி சான்றிதழ் படிப்பும், முதுகலை பட்டப்படிப்பும் படித்தார். பின்னர் தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 2000ஆம் ஆண்டில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.. வால்மீகி இராமாயணத்தில் சோதிடவியலின் கோட்பாடுகள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து 2006ல் முனைவர் பட்டம்பெற்றுள்ளார்.
சிறு வயதிலிருந்தே சோதிடத்தைப் பற்றிய நூல்களை வாசிப்பதிலும், அவற்றின் பலன் கூறும் அமைப்புகளையும் நன்கு அறிந்து தன்னை முழு நேர சோதிடராக மாற்றியுள்ளார். மதுரை மாநகரத்தில் சோதிட அலுவலகம் அமைத்து பலன்கள் கூறிக் கொண்டிருந்த வேலையில் திருமணம் ஆனது. பின்னர் 1993ல் மதுரை காமராசர் பல்கலையில் தொலை தூர அஞ்சல் வழியில் தொடங்கப்பட்ட சோதிடவியல் பட்டயக்கல்வியில் தேர்ச்சி பெற்றார். அதன் பின்னர் அதே பல்கலையில் சோதிடவியல் பட்டயக்கல்வி பாடத்திட்டதிற்கு ஏழாண்டுகள் வகுப்பும் எடுத்துள்ளார்.. மதுரை பல்கலையில் சோதிடவியல் துறை என்று ஒன்று இல்லாதது பெரும் குறையாக கூறிக்கொண்டிருப்பார்.. ஏனெனில் சோதிடவியல் பட்டயக் கல்வியுடன் நின்று போய்விட்டது.. ஒரு ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை…
சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம்

கி.பி 2002 ஆம் ஆண்டில் இந்திய சோதிடவியல் வரலாற்றில் மாற்றம் ஏற்பட்ட ஆண்டு எனலாம். இந்திய பல்கலைக் கழக மாணியக்குழு முதன் முதலில் 2001ல் வெளியிட்ட ஆணையில், இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், சோதிடவியல் துறையை ஏற்படுத்தி சான்றிதழ் படிப்பு முதல் முனைவர் பட்ட படிப்பு வரை தொடங்கலாம் என்றது. { இதற்கு முன்னர் நடை பெற்ற எந்த சோதிட படிப்புகளும் தோதிடவியல் துறையினரால் நடத்தப்படவில்லை.} அதன்படி 2002ல் தஞ்சை சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில், தமிழகத்தின் முதல் சோதிடவியல் துறை தொடங்கப்பட்டது. அதேபோல் அதில் முனைவர் தி. விமலன் அவர்கள் சோதிடவியல் துறையின் தலைவராகவும், விரிவுரையாளராகவும் பணியில் அமர்த்தப்பட்டார். இதுவே தமிழக சோதிடவியல் வரலாற்றில் திருப்பமாக அமைந்தது.
2002ல் முனைவர்,தி.விமலன் அவர்கள் சோதிடவியல் கல்வியில் பட்டயப்படிப்பும், இளங்கலை பட்டப்படிப்பும் கொண்டு வந்தார்.. இதுவே அங்கீகரிக்கப்பட்ட உலகப் பல்கலைக்கழக வரலாற்றில் முதன் முதலில் தொடங்கப்பட்ட இளங்கலைப் பட்டப்படிப்பாகும். இந்த இளங்கலைப்பட்ட படிப்பை விமலன் அவர்கள் தொடங்கியதனால் இந்திய சோதிடவியல் வரலாற்றில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்திய பெருமைக்கு உள்ளானார்.
இளங்கலை பட்டப்படிப்பு

இவர் கொண்டு வந்த இளங்கலை மூன்றாண்டு பட்டப்படிப்பில் ஆண்டிற்கு நான்கு பாடங்கள் என்று பன்னிரெண்டு பாடங்கள் நடத்தப்பட்டன. இதில் ஆங்கில மொழிப்பாடம் நீங்கலாக பதினொரு பாடங்களுக்கு பாட நூல்களை எழுதியது விமலன் அவர்களே ஆகும்.
1. அடிப்படைசோதிடவியல் ;இராசிகள், கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் தன்மைகள், பஞ்சாங்கம், முகூர்த்தம், தியாஜ்ஜியம் போன்றவற்றின் விளக்கங்கள், யுரேனஸ், நெப்ட்யூன், சோதிடரின் நெறிமுறைகள் கொண்டதாகும்.
2. சாதக கணித முறைகள் ; விண்மண்டல விளக்கம், அட்ச,தீர்க்க ரேகைகள், மணிகள், அயனாம்சம், தசவர்க்கம்,சட்பலம்,அஸ்டவர்க்கம்,வாக்யமுறைப்படி சாதகம் கணித்தல், திருக்கணிதம், எபிமெரிஸ்படி சாதகம் கணித்தல் ஆகும்.
3. பிருகத்சாதகம்;இராசி,கிரகம்,இராசயோகம்,நாபசயோகம்,சந்திரயோகம்,பிரவிரச்யா யோகம்,கர்மசீலம்,துவாகிரகம்,ரிகசசீலம்,திருஸ்டிபலம்,அரிஸ்டம்,ஸ்திரிஜாதகம், திரேகாணம், நைர்யாணி அத்யாயம், போன்றவை பாடங்களாகும்.
4. சாராவளி : கோள்கள்,இராசிகள். கூட்டுக்கோள்களின் பலன்கள்,ஒவ்வொரு கோள்களும் இராசியில் நிற்கும் பலன்கள்,பார்வைப் பலன்கள், அரசயோகங்கள், தீங்கு நிலைகள், பன்னிருபாவகத்தில் கோள்களிருப்பதினால் ஏற்படும் பலன்கள்.
5. பராசர ஹோரா சாஸ்த்ரா ; பாவங்களில் கோள்கள் ஏற்படுத்தும் தன்மைகள், பாவக்கோள்களினால் ஏற்படும் அரசயோகத்தன்மைகள்,செல்வயோகங்கள், பாவாதி பதிகள் மாறியிருப்பதால் ஏற்படும் பலன்கள்,புத்திர தோசங்கள், மாரகம், ஏழ்மை, பஞ்சமகாபுருசயோகம்,கோள்களுக்குரிய நோய்கள், தசாப் பலன்கள், காரகாம்சம்.
6. உத்ரகாலாமிர்தம்; பாவகம்,கோள்களின் காரகங்கள்.ஆயுள்கணித விளக்கங்கள், பிரசன்னசோதிடம்,சட்பலம்,பாவகக் கோள்களின் பலன்கள்,பார்வைபலன்,செல்வந்தர் யோகங்கள்,தீயபாவகங்கள், யோகர்,மாரகர்,தீயவர், இராகு,கேதுக்களின் பலன்கள்.
7. சமயமும்-தத்துவமும்; இனக்குழு சமயம்,நிறுவனச்சமயங்கள்,இந்து,கிறித்துவம், இசுலாம்,சமணம்,பௌத்தம்,சீக்கியம், ஆகிய சமயங்களின் கோட்பாடுகள், பகுத்தறிவு தத்துவம், சிக்மண்ட் ப்ராய்டு,சமயச்சிந்தனையாளர்களின் கருத்துக்கள்.
8.முக்கியமான யோகங்கள்; செல்வயோகங்கள், ஒவ்வொரு பாவகத்தின் தொடர்பு யோகங்கள், தீயயோகங்களின் விளக்கங்கள், பெயருடன் கூடிய யோகங்களின் விளக்கங்கள், பாவாதிபதி இணைவுகளினால் ஏற்படும் யோகங்களின் விளக்கங்கள்.
9.சாதகப் பலன்களை வரையறுத்தல்; இலக்னப்பலன்கள்,பன்னிருபாவகத்திலும் கோள்கள் இருக்கும்பலன்கள்,சேர்க்கைப்பலன்கள், விம்சோத்தரிதசாப்பலன்கள், திருமணப்பொருத்தவிளக்கம், பத்துபொருத்த அமைப்புகள், பலன்கள்.
10.நவீன கால சோதிட வளர்ச்சி; கிருட்டிணமூர்த்தி முறையின் கோட்பாடுகள், இராசிகள்,கோள்கள் தன்மைகள்,இராசிகளுக்குரிய உபநட்சத்திரப் பிரிவுகளின் பலன்கள், பன்னிருபாவ உபநட்சத்திர அதிபதிகள் மற்ற பாவக அதிகாரப் பலன்கள்.
11.சாதக பகுப்பாய்வு; பன்னிரு இலக்ன சாதகங்களின் பலன்கள் கூறும் அமைப்பு. ஒவ்வொரு சாதகத்திற்கும்.,இலக்னம்,கோள்கள் நின்றபாவகம்,கோள்கள் மாறி நின்ற பாவகம், சேர்க்கை,தசா,புத்தி, செல்வயோகம்,அவயோகம் பொன்ற பலன்கள்.
இப்பாடங்கள் அனைத்தும் தொலைதூரக் கல்வி முறையில் நடந்ததாகும். முதல் மூன்றாண்டுகள் அனைத்துப் பாடங்களையும் பேராசிரியர் விமலன் ஒருவர் மட்டுமே நடத்தினார். 2009ல் சாஸ்த்ராவிலிருந்து விலகி கோவை கற்பகம் பல்கலையில் சேர்ந்தார்.
கற்பகம் நிகர் நிலைப் பல்கலைக்கழகம்;
2009 ல் கோவை கற்பகம் பல்கலையில் சோதிடவியல் துறைப் பேராசிரியர் மற்றும் இயக்குனாராகப் பணியில் அமர்த்தப்பட்டார். இங்கு தான் உலகின் முதன் முதல் சோதிடவியலில் அறிவியல் பட்டப்படிப்பை தொடங்கினார். இளநிலை,முதுநிலை மற்றும் பயன்பாட்டு முதுநிலை என்ற அறிவியல் பாடப்பிரிவுகளை ஏற்படுத்தினார். அவை அனைத்திற்கும் பாடநூல்களை எழுதி ஆயிரக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெற வழி ஏற்படுத்தினார்..
முதுநிலை அறிவியல் சோதிடப் பட்டபடிப்பு
1.சோதிடவியல் வரலாறு ; சோதிடவியலின் தோற்றம்,பாபிலோனியம்,கிரேக்கம், இந்திய சோதிடம், வானியல் வளர்ச்சி, பஞ்சாங்கம்,மேற்கத்தியம், வேதகாலம், பண்டைய சோதிடர்கள்,தமிழர்களின் சோதிடம், தற்கால சோதிடம்.
2.பிரசன்னசோதிடம்; பிரசன்ன சோதிட விதிகள், பதில் கூறும் முறைகள், சகுனம், பிரசன்ன முறயில் இராசிகள், கோள்களின் குணங்கள், கிருட்டிணமூர்த்தி முறையில் பிரசன்ன சோதிட முறைகள்,
3.நவீனகால சோதிடம்;
இராசிகள், கோள்களுக்குரிய குணங்கள், உப நட்சத்திரப்பலன்கள், பன்னிரு பாவகத் தொடர்பினால் ஏற்படும் வினாக்களுக்கு பலன் கூறும் முறைகள்.. கிருட்டிணமூர்த்தி முறையில் சாதக ஆய்வுகள்.
4.மேற்கத்திய சோதிடம்;
அடிப்படை விதிகள், சாயனமுறை, கோள்கள், இராசிகளுக்குரிய குணங்கள், ஆண், பெண், குழந்தை, முதலாளி,தொழிலாளியின் குணங்கள், கோணம், சதுரம் பார்வைப் பலன்கள், யுரேனஸ்,நெப்ட்யூன், புளூட்டோ.
5.தொழில் முனைவோர் சாதகங்கள்;
கோள்களுக்குரிய தொழில்கள், தொழிலிற்கான விதிகள், பலவேறுபட்ட வியாபாரிகள், பல்வேறு பணிகள் செய்யும் தொழிலாளர்களின் சாதகங்கள் ஆய்வுப் பலன்கள்.
6.மருத்துவ சோதிடம் ;
மருத்துவ சோதிடத்தின் அடிப்படைக் கொள்கைகள், உடற்கூறுகள், நோய்கள், தசா,புத்திகாலங்களில் ஏற்படும் நோய்களும், காற்று, நீர், நரம்பு, சம்பந்தப்பட்ட நோய்களின் கோள்கள் நிலைகள், பழைமையான சோதிட நூல்களின் கூற்றுகள்…
7.இகலோகச் சோதிடம் ;
நெருப்பு,நிலம்,காற்று,நீர் இராசிகள், கோள்கள்,நட்சத்திரங்கள், இவற்றின் பலன்கள், ஊர்கள்,நாடுகள், நாட்டிற்காக செயல்படும் விளக்கங்கள், மக்களின் பிரிவுகள், மழைக்குறி அறிதல், ஆண்டுப்பலன்கள், இயற்கைப் பேரழிவுகள்..
8.தொழில் சார்ந்த சாதகங்கள் ;
ஆசிரியர்கல் சாதகங்கள், குரு,புதனின் தொடர்பகள், மருத்துவர்கள் சாதகங்கள், கணக்காளர்கள் சாதகங்கள், வழக்கறிஞர்கள் சாதகங்கள், பொறியாளர்கள் சாதகஙள். ஆகியவற்றில் கோள்களின் தொடர்புகள்…
9. அரசுப் பணியாளர்கள், தொழிலாளர்கள் சாதகங்கள்:
அரசுத்துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் சாதகங்களில் கோள்களின் நிலைகளும், அதற்குரிய விதிகளும், பல்வேறு தொழில் செய்யும் சாதகங்களில் கோள்களின் செயல்பாடுகள்.
10,திட்டக் கட்டுரை (ஆய்வேடு)
ஒவ்வொரு தொழிற்பிரிவிலும் உள்ள 50 சாதகங்கள் எடுக்கப்பட்டு பத்து விதிகளைக்கொண்டு ஆய்வு செய்து முடிவு அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு சோதிடவியல் துறையில் ஆய்வு சிந்தனையுடன் கூடிய பாடப் பிரிவு களை எழுதி, அவற்றை ஒருவரே முழுமையாக நின்று நடத்தினார். இவருடைய பாடப் பிரிவுகளில் ஆயிரக்கணக்கானோர் பட்டயம், பட்டம் பெற்றுள்ளனர்.
ஆய்வியல் நிறைஞர்- முனைவர் பட்டம் ;

இருபது நபர்களுக்கு சோதிடவியல் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வு நெறியாளராக இருந்து பட்டம் பெற உதவியுள்ளார். எட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு முனைவர் பட்ட ஆய்வாளராக இருக்கிறார்.
இவ்வாறு தமிழகத்தில் சோதிடவியல் துறை ஏற்படுத்தி, பட்டயம் முதல் பட்டம், முதுநிலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் மற்றும் அறிவியல் சோதிடப் பாடத்தையும் ஏற்படுத்திய பெருமை முனவர் தி. விமலன் அவர்களையே சாரும்.
சமூகப் பார்வை

சோதிடவியல் துறை மட்டும் இல்லாமல், தமிழக சோதிடத்தை ஒன்றிணைக்கும் எண்ணத்தில் பட்டதாரிகள் சோதிட சங்கத்தை தொடங்கினார். 2005 ஆம் ஆண்டு திருச்சியில் மாவட்ட சங்கம் முதலில் தொடங்கப்பட்டது. பின்னர் சேலம், மதுரை, திருநெல்வேலி,தஞ்சாவூர்,சென்னை,கோவை ஆகிய ஊர்களிலும் மாவட்ட சங்கங்கள் தொடங்கினார். 2007ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சோதிடவியல் பட்டதாரிகள் & முதுகலைப் பட்டதாரிகள் சங்கம் தொடங்கி நடத்தி வருகிறார். இதன் மூலம் பல்வேறு தகவல்கள் மக்களுக்கு தெரியப்படுத்தப் பட்டுள்ளது.
தொடக்கத்திலிருந்து சோதிடத்தில் ஆன்மீகக் கருத்துக்களையும்,பரிகாரக் கருத்துக் களையும் மறுத்து வந்துள்ளார். சாதகத்தின் உண்மை தன்மையான தலைவிதியை வாசிக்கும் கலை என்பதில் இன்றுவரை உறுதியாக உள்ளார்.
யூ டியூப்

இணைய தளத்தில் உள்ள யூ டியூப் சேனலில் எழுபதுக்கும் அதிகமாக சோதிடவியல் சீர்திருத்தக் கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அவை, அமாவாசையில் நல்ல நிகழ்ச்சிகள் தொடங்கலாமா, சந்திராஸ்டமம், விலங்குகளுக்கு சோதிடம்,பிரம்ம முகூர்த்தம், அயனாம்சம், பதினாறு சடங்குகள், யோகம், நவாம்சம்-வர்க்கமேன்மை, குழந்தை பிறப்பு, நட்சத்திர தோசம், ஏழரைச் சனி, திருமணம், முகூர்த்தம், ஏழாம் பாவகம், இரட்டைகுழந்தை சோதிடம், கேந்திராதிபத்ய தோசம், ஒரேஇராசி-நட்சத்திரம் பாவகோ காரநாஸ்தி, மானுட முயற்சியை தடுக்கிறதா, கூட்டு தசா, சோதிடம் பேராசை, ஒரே பலன்களை கூறமுடியவில்லையா, அதிர்ஸ்டம், சோதிடம் தன்னை இகழ், அனைத்து மதத்தினர்க்கும், சொந்தத்தில் திருமணம், ருது சாதகம், களத்திர தோசம், சிசேரியன் குழந்தை, தோசவிளக்கம், 6,8,12,பாவக விளக்கம், சமயமா-அறிவியலா, நவாம்சபலன், மேற்கத்திய சோதிடம், மரணகாலம், வெள்ளிக்கிழமை பிறப்பு, பத்துப்பொருத்தம், யோனிப்பொருத்தம், சூரியன் –செவ்வாய் இணைவு, கற்புநிலை, திருநங்கை சாதகங்கள், ஒரே நேரப்பிறப்பு, சாதி-மதப்பிரிவுகள், தாமதத்திருமணம், இராகு-சந்திரன், கணப்பொருத்தம், சோதிட நிபுணப்பிரிவுகள், புகுந்த வீட்டுப்பெண், திதி சூன்யம், அந்திசாய்ந்த சோதிடம், சோதிடம்சரியா, மானுடப் பயன், இந்திய சோதிட வரலாறு, போன்ற தலைப்புகளில் { vimalariias – you tube } நன்கு காணலாம். இக்கருத்துக்கள் அடங்கிய video cd க்களும் வெளியிட்டுள்ளார்.
VIMALANRIIAS TRUST

விமலன் இந்திய சோதிட அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் என்று கோயமுத்தூர் வடவள்ளியில் தொடங்கி நடத்திவருகிறார். இதில் சோதிடப் பாடங்கள் நடத்துவதும், பொது மக்களுக்கு சோதிடப்பலன்கள் கூறியும் வருகிறார். சோதிடத்தின் பல்வேறு பிரிவுகளில் ஆராய்ச்சியும் செய்து கொண்டிருக்கிறார். இவருடைய ஆராய்ச்சிக் கருத்துக்களை தனது vimalanriias.blogspot.com மூலமாக உலகினர்க்கு தெரிவித்தும் வருகிறார்.
நான் மேலே கூறிய நூல்களுடன் மேலும் பல நூல்கள் வேறு பாடப்பிரிவுகளுக்கு எழுதியுள்ளார். அவற்றை எல்லாம் கற்ற மாணவர்கள் இன்றும் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றனர். இனி மேலும் அனைவரும் கற்றுக்கொள்ள வாய்ப்புகளும் ஏற்படும். தனது vimalanriias ஆராய்ச்சிக்கழகம் மூலமாக அனைத்துப் படிப்புகளும் கற்கின்ற வாய்ப்புகள் ஏற்படும். எங்களது அனைவரின் வேண்டுகோளையும் ஏற்றுக் கொண்டு இந்த ஆண்டு முதல் பழைய படி பல்கலைக் கழகத்தின் மூலம் தமிழக மக்களை சந்திக்கவுள்ளார். முக்கியமாக ஆராய்ச்சி மாணவர்கள் நன்கு பயனடைவர்….
நான் சோதிடவியல் மாணவராக சேர்ந்த பொழுது இவர் ஒரு பகுத்தறிவு சோதிடராகவே காட்சியளித்தார். அதேபோல் பாடங்கள் நடத்தும் பொழுதும் மூடநம்பிக்கைகளை முற்றிலும் தவிர்த்து , உண்மையான சோதிட நுணுக்கங்களை கற்பித்தார். அனைத்து மாணவர்களையும் ஒன்று போல் கருதும் நல்லாசிரியராவார். தமிழகம் சோதிடத்தில் அறிவியலும், ஆராய்ச்சியும் கொண்ட பாதையில் செல்வதற்கு வித்திட்டுள்ளார். அதற்காக இரவும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிற பேராசிரியர் முனைவர் தி. விமலன் அவர்கள் ஒரு ”சோதிட சகாப்தம்” என்றால் அது மிகையல்ல…
அன்புடன் பேராசிரியர் அவர்களுக்கு எனது இந்த பதிவை தங்களது blogspot லும் பதியும் படி வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன் …. மிக்க நன்றி………
C.J. BATHRINARAYANAN. M.A., M.Sc., ( Ph.D )
TREASURER
TAMILNADU STATE ASTROLOGY GRADUATES & POST GRADUATES ASSOCIATION… COIMBATORE .

Monday 2 February 2015

ஸப்தரிஸிகளும்---- சோதிடமும் 02-02-2015.


ஸப்தரிஸிகளும் சோதிடமும்

எனது அன்பு நண்பர்களே !! மீண்டும் உங்கள் அனைவரையும் எனது பிளாகில் சந்திப்பதில் மகிழ்வுறுகிறேன்…..

நீண்ட நாட்களாக மனதில் இருந்த ஒரு பாரத்தை இக்கட்டுரை வழியாக உங்களிடம் இறக்கி வைக்க முன் வந்துள்ளேன்..
தொடக்க காலத்தில் சோதிடம் பற்றிய செய்திகளை அறிய முற்படும் பொழுது சிலர், சோதிடத்தை ரிஸிகள் தங்களது மெய்ஞானத்தில் கண்டு பிடித்தனர் என்று கூறினர்…. அப்பொழுது இது பற்றிய ஆய்வுகள் செய்வதில் முனைப்புக் காட்டாமல் ,சோதிடம் கூறுவதிலேயே ஆர்வம் அனைத்தையும் வைத்திருந்தேன்.  பின்னர் பலர் சப்தரிஸி நாடி நூலில் கூறியுள்ளது என்பதைக் கேள்விபட்டு அந்நூலை பார்க்கவும்,வாசிக்கவும் நேர்ந்தது..

அவ்வாறு படிக்கும் பொழுது பல சந்தேகங்கள் எழுந்தன. அவற்றை தீர்த்து வைப்பதற்காக சில சோதிடசிகாமணிகளை அணுகிய பொழுது அவர்கள் அரை குறையாகவே பதில் கொடுத்தார்களே தவிர முழுமையான எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.. பின்னர் நானே ஆய்வுகள் செய்து முடிவுகள் அறிவிக்கலாம் என்ற பொழுது எனக்கு முழு நேர ஆசிரியப் பணி கிடைத்துப் பணிக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது. அதனால் கூறமுடியவில்லை.. தற்பொழுது அக் கட்டுப்பாடு இல்லாததால் எழுதுகிறேன்….

ரிஸிகள் ;


இந்தியாவைப் பொருத்தவரை ரிஸிகள் இல்லாத கலாச்சார வாழ்வு இல்லை என்றே கூறலாம். அவ்வாறு மக்களுடைய வாழ்வில் முதன்மையான இடத்தைப் பெற்றவர்களாக ரிஸிகள் உள்ளனர்…. எந்த ஒரு சிக்களுக்கும் தீர்வு கூறுவதில் திறமை பெற்றவர்களாக இருந்துள்ளனர். ..இருக்கின்றனர்

ரிஸிகளிடம் மதிப்பும், மரியாதையும் உள்ளவர்கள் இந்தியாவில் அதிகமாகக் காணப்படுகின்றனர்… அதிலும் வட இந்தியாவில் கூடுதலாகவே உள்ளனர்… இவ்வாறு இந்திய ரிஸிகள், இந்திய மக்களிடம் அதிகாமாக செல்வாக்குப் பெற்றுள்ளனர்… தற்பொழுதுள்ள ரிஸிகளுக்கே இவ்வளவு செல்வாக்கு என்றால் , அக்கால ரிஸிகளுக்கு கேட்கவா வேண்டும்.. புராணக் கதைகளிலும், காவியங்களிலும், சமய நூல்களிலும் ரிஸிகளின் கூற்றே முதன்மையானது என்று இருந்துள்ளது.

இந்து சமயத்தின் வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் போன்ற அனைத்திலும் ரிஸிகளின் பங்கு அதிகமாக உள்ளன. வேதங்களை இயற்றிய அனைத்துப் பண்டிதர்களும் பெயர்கள் இல்லாமல் ஒரெ ஒரு பெயரான “ வியாசர் “ என்று கூறுகிறோம் அல்லவா…{ என்ன வேதங்களை பல பண்டிதர்கள் இயற்றினார்களா என்று சந்தேகம் வருகிறதா???.. நான்கு வேதங்களும் ஒருவரால் எழுதப்பட்டவை அல்ல..

ஒவ்வொன்றிற்கும் சுமார் 500 ஆண்டுகளுக்கும் குறைவான இடைப்பட்ட காலங்களில் உருவாக்கப் பட்டன. எனவே இவை அனைத்தும் பல மாணுடர்களால் எழுதப்பட்டவை ஆகும்.. ஆனால் அவர்கள் பெயர்கள் இடம் பெறவில்லை.. பொதுவாக வியாசர் என்று கூறப்படுகிறது.. இவ்வாறு சமய நூல்களில் பல பெயர்கள் உள்ள ரிஸிகள் உள்ளனர்.

இந்துசமய வேதத்தில் உள்ள வானசாத்திரத்தை தொகுத்தளித்த மகரிஸி லகதா வையும் ரிஸி என்றே அழைக்கிறோம். எனவே இந்தியர்களின் வாழ்வில் ரிஸிகளின் பங்களிப்பு அதிகமாகவே இருந்துள்ளது.

அதே பொல் இந்திய வானசாத்திரத்தில் பதினெட்டு சித்தாந்தங்கள் இருந்ததாக ஒரு கூற்றும் உள்ளது. ஆனால் அந்த சித்தாந்தங்களின் பெயர்கள் உள்ளனவே தவிர ,,, சித்தாந்தங்கள் இல்லை…. 

பதினெட்டு சித்தாந்தங்கள் :
1.சூர்ய…, 2.பிதாமக…,3.வியாச…,4.வசிஸ்ட…,5.அத்ரி….,6.பராசர…..,7.காஸ்யப….,
8.நாரத….., 9.கர்க….,10.மரீஸி….,11.மனு…..,12.ஆங்கிரஸ….,13. லோமஸ….., 14.பௌலிஸ..,15.ஸ்யாவன…,16.யவன….,17.பிருகு…,18.ஸௌனக….. என்று இவர்களின் பெயர்களைக் கொண்டே சித்தாதங்கள் இருந்ததாக வரலாறு கூறுகிறது… இந்த நூல்கள் எதுவுமே தற்பொழுது இல்லை….

சோதிட ரிஸிகள்


உண்மையில் சோதிட ரிஸிகள் என்று எவருமே இல்லை.வான சாத்திரத்தை அறிந்திருந்த ரிஸிகள் சோதிட சாத்திரத்தை எழுதவில்லை.
அப்படியானால் பராசர ஹோரா ஸாஸ்த்ரா என்ற சோதிட நூலை இயற்றியது பராஸர ரிஸி இல்லையா என்ற வினா எழுகிறது… உண்மையில் நமது இதிகாசப் புராணங்களில் கூறப்படும் பராஸரர் இந்த சோதிட நூலை இயற்றியிருப்பதற்கு வாய்ப்பே இல்லை… இவர் வாழ்ந்த காலமாக கூறப்படும் காலங்களில் வானசாத்திரமே வளர்ச்சியடையாத நிலையில் இருந்துள்ளது.. அப்படியிருக்கும்பொழுது, நன்கு வளர்ச்சி பெற்ற சோதிட நூலான பராஸர ஹோரா ஸாஸ்த்ராவை எழுதுவதற்கு வாய்ப்பே ஏற்பட முடியாது…. ஏனெனில் இந்நூலில் உள்ள 32 வகையான தசாக்களில் ஒன்று கூட வராகமிகிரரின் நூலில் இல்லை.. வராகரின் பிருகத் சாதகத்தில் உள்ள தசாகணிதம் வேறு மாதிரியாக உள்ளது.

புராணக்கதைகளின் படி வராகமிகிரர் ,,, பராசரர்க்கு பிந்தியவராவார்.. எனும் பொழுது முந்தியவரான பராசரரின் தசாகணிதத்தை வராகமிகிரர் எழுதியிருக்க வேண்டும் ,அப்படி எழுதவில்லை.. ஆனால் பராசர சோதிட நூலோர் ,,,வராகரின் தசா கணிதத்தை தவிர்த்து ,32 வகையான தசா கணிதத்தை கொடுத்தள்ளார்.. எனவே  வளர்ந்துபட்ட பராசர ஹோரா சாத்திர சோதிட நூல் வராகருக்குப் பிந்தியதாகும். வராகரரின் காலம் கி.பி. 6 ஆம் நூற்றாண்டாகும்..இவருக்குப் பின்னர் பராஸரர் வாழ்ந்ததாக கூற முடியாது… ஆதலால் பிருகத் பராஸர ஹோரா ஸாத்திர நூல் நல்ல ஒரு சோதிட அறிஞரால் இயற்றப்பட்டு, அவர் பெயரில் வெளியிடாமல் , ரிஸியின் பெயரால் வெளியிடப்பட்டுள்ளது…

இந்நூலைத் தவிர தமிழில் பல சோதிடநூல்கள் ரிஸிகளின் பெயர்களில் எழுதப் பட்டுள்ளன. அவற்றில் மொழிபெயர்ப்பு நூல்கள் , கௌஸிக ஸிந்தாமணி போன்ற தமிழ் சோதிட நூல்கள் அனைத்தும் நல்ல சோதிட அறிஞர்களால் எழுதப்பட்டதாகும். அவற்றிற்கும் நமது நாட்டின் ரிஸிகளுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை.

இக்கருத்துக்கு வலுசேர்ப்பதற்கு மற்றொரு காரணத்தையும் கூறலாம்… வளர்ந்துபட்ட சோதிட சோதிட க்கருத்துக்கள் உள்ள நூல்கள் அனைத்தும் கி.பி.5 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் எழுதப்பட்டதாகும்.. ரிஸிகளின் காலம் கி.பி. 5 ற்கு முந்தியதாகும். எனவே சோதிடர்கள் தங்களுடைய கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தங்களது சோதிட நூல்களில் ரிஸிகளின் பெயர்களைப் பயன் படுத்தியுள்ளனர்…

சப்தரிஸி நாடிசோதிட நூல்..


சென்னை கீழ்திசை சுவடி ஆராய்ச்சி கழகத்தின் சார்பில் 1950 க்குப்பின்னர் வெளியிடப்பட்ட நூல்களாகும். இவை மேசம் முதல் கன்னி வரை ஆறு இலக்னங்களுக்கு தமிழ் சோதிடப் பாடல்களுக்கு  விளக்கவுரையுடன் எழுதப்பட்டதாகும்.

ஒவ்வொரு இலக்னத்திற்கும் சுமார் 100 முதல் 150 சாதகங்கள் கொடுக்கப்பட்டு அதற்குப் பலன்களும் எழுதப்பட்டுள்ளன. இதில் உள்ள சாதகங்களின் கோள்கள் நிலைகள் அனைத்தும் கி.பி 1850 முதல் 1900 வரையுள்ள காலங்களுடையதாகும்… இக்காலங்களில் நிச்சயமாக எந்த ரிஸிகளும் வாழவில்லை.. சரி இக்காலத்தில் உள்ள கோள்கள் நிலைகளைக் கணித்து முன்னரே கூறியுள்ளனர் என்றால் எந்த ரிஸிக்கு தமிழ் மொழி தெரியும்????????????????/ சரிஅப்படியே தமிழ் தெரிந்த ரிஸி தான் எழுதியிருந்தாலும் முந்தைய காலத்தின் தமிழ் வான சாத்திர நூல் எங்கே என்ற பல வினாக்கள் எழுகின்றன.

இவ்வாறு பல்வேறு ஐயப்பாடுகளுடன் கூடிய சப்தரிஸி நாடி சோதிடம் நல்ல ஒரு சோதிடரால் எழுதப்பட்டதாகும்…அதற்காக பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டுள்ளார். உண்மையில் வரவேற்கப்படக்கூடியதாகும்..
ஆனால் அந்நூலின் தற்காலப் பயன் பாடு பற்றி சிந்திக்கும் பொழுது, எவ்விதப் பயனும் இல்லாததாகவெ உள்ளது..

நாடி சோதிட நூல்கள் என்பது பழங்காலத்தியது என்பது பொய்யான கூற்றாகும்.நாடி சோதிட நூல்கள், சுவடிகளில் உள்ள தமிழ் சோதிட பாடல்கள் என்பது எந்த ரிஸிக்கும் தெரியாத மொழியாகும். அனைத்து ரிஸிகளின் மொழிகளும் ஸமஸ்கிருதமே . ஆனால் நாடி சோதிட நூல்களில் உள்ள ரிஸிகள் ஸமஸ்கிருதத்தினர் எனும் பொழுது அவர்கள் எழுதிய பாடல்களும் சமஸ்கிருதமாகவே இருக்க வேண்டும்… அப்படியில்லை.. பாடல்கள் அனைத்தும் தமிழ் மொழியில் உள்ளன.. எனவே சப்தரிஸி நாடி சோதிட நூல்களின் கருத்துக்கள் தற்கால தமிழில் கவியுடன் பாடல் எழுதத் தெரிந்த சோதிடர்களாலேயே எழுதப்பட்டதாகும்.

இந்த சப்தரிஸி நாடி சோதிடத்தில் உள்ள சோதிடக்கருத்துக்கள் அனத்தும் தற்கால வாழ்விற்கு பயன் படக்கூடியதும் இல்லை…
சரி அகத்தியர் போன்ற ரிஸிகள் தமிழ் தெரிந்தவர் என்ற வினா எழலாம். நமது பல்கலைக் கழக தமிழ் ஆய்வாளர்கள் 41 அகத்தியர்கள் வாழ்ந்துள்ளதாக கண்டு பிடித்துள்ளனர். இதில் எந்த அகத்தியர் ரிஸியாக இருந்தார். அவர் வாழ்ந்த காலம் என்ன???? அப்பொழுது வான சாத்திர வளர்ச்சி என்ன?????/ அவருக்கு 1850 ல் உள்ள கோள்களின் நிலையைக் கணித்து பலன் கூற முடியுமா போன்ற பல வினாக்கள் எழுகின்றன…

இவற்றின் அடிப்படையைக்கொண்டு பார்க்கும் பொழுது ரிஸிகளின் பெயர்களில் உள்ள சோதிட நூல்கள் அனைத்தும் சோதிட அறிஞர்களால் எழுதப்பட்டது என்று முடிவிற்கு வர முடிகிறது….
அதேபோல் சப்தரிஸி நாடி சோதிட பாடல்கள் அனைத்தும் தமிழில் இருப்பதால், அவற்றை ரிஸிகள் எழுதவில்லை என்றும் , சோதிடர்களே எழுதினார்கள்,,, எழுதுகிறார்கள் என்றும்முடிவிற்கு வர முடிகிறது…….

பழையனவற்றை ஆய்வு செய்வோம் !!! ஏற்புடையதை பயன் படுத்துவோம்… பயனற்றதை மறுதலிப்போம்…

சோதிடத்தை நாம் ஆய்வு செய்தால் எல்லோராலும் போற்றப்படுவோம்… மற்றவர்கள் ஆய்வு செய்தால் அனைவராலும் தூற்றப்படுவோம்…

வாழ்க சோதிடம்……………..

மிக்க நன்றி……..

Professor. Dr.T.Vimalan…
02-02-2015.