Sunday 21 September 2014

இந்து சமயம் அறிந்து கொள்ளுங்கள்.1

அன்புடையீர் வணக்கம்.
         
              நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய நாட்டின் தொண்மையான தெய்வீக வழிபாட்டில் எந்த சமயம் பழமையானது என்பதில் பல்வேறு கருத்துக்களை காணமுடிகிறது. இவற்றில் எது சரியானது என்ற ஆய்வில் ஏற்பட்ட முடிவுகளே இங்கு கருத்தாக உருவாக்கப்பட்டுள்ளது.
            உலகின்  உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவாக இருக்கக்கூடிய ஒரு தன்மை அச்சம் என்பதாகும். தனது ஒவ்வொரு செயலிலும் அச்சம் என்பது மையமாக அமைகிறது. வலுவான உயிரினம், வலுவற்ற உயிரினத்தை உண்டு வாழ்வது இயற்கையின் அமைப்பாகும். எந்த உயிரினம் மிகவும் வலுவானது என்று முடிவிற்கு வர இயலாது.எனவே அச்சம் என்பது அனைத்து உயிர் வாழ்வனவற்றின் மையமாக உள்ளது. இதன் அடிப்படையில் மானுட வாழ்வும் அமைகிறது.
தொடக்க கால மானுடம்;
            இயற்கையின் பரிணாம வளர்ச்சியில்  மானுடம் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன என்பது நாம் அறிந்த ஒன்றாகும். இப்பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்வில் மானுடம் பெரும்பாலும் ஐந்தறிவு வாழ்க்கையே நடத்தி வந்துள்ளது. இவ்வாழ்வில் மானுடத்திற்கு உழைக்கத்தெரியவில்லை. ஆதலால் இயற்கையில் கிடைப்பதை உண்டு வாழ்ந்தது. உணவு ஒன்றே தேடுதலாகும். இந்த வாழ்விலும் அச்சம் மையமாகவே இருக்கும். இருப்பினும் அச்சத்திற்காக முறையான தெய்வீக வழிபாடு எதுவும்  ஏற்படுத்தவில்லை.                   இவர்கள் வாழ்வும் ஒவ்வொரு கூட்டமாகவே இருந்துள்ளது.ஆதலால் மற்ற விலங்கினத்தைப் போலவே உணவிற்காக ஒரு கூட்டத்திற்கும் மற்ற கூட்டத்திற்கும் சண்டைகளும்,அழிவுகளும் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். கூட்டத்திற்கு தலைவியாக பெண்களே இருப்பர். ( ஒரு உயிர் மற்றொரு உயிரை உண்டு வாழும் அடிப்படையில், உயிரை பெற்றெடுக்கும் பெண்களே கூட்டதின் தலைவியாக இருந்துள்ளனர்.) நாகரீகம் கிடையாது.உடைகள் கிடையாது. அம்மா,அப்பா,அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை,போன்ற எவ்வித உறவுகளும் கிடையாது. ஆண்,பெண் என்ற இரண்டு பிரிவுகள் மட்டுமே இருந்துள்ளன. இனப்பெருக்கம் என்பது மற்ற விலங்கினங்களைப் போலப் பொதுவாகவே இருந்துள்ளது. எனவே தொடக்ககால மானுடத்தின் தேடுதல் உணவு மட்டுமே ஆகும்.
            உணவு வேட்டையில் மற்ற விலங்கினத்திற்கும், மானுடத்திற்கும் பெரும் போராட்டம் ஏற்படும். விலங்கினத்தில் ஒன்றை மானுடம் அடித்து சாப்பிடும்.அதேபோல் மானுடத்தில் ஒன்றை விலங்கினம் அடித்து சாப்பிடும். மானுடத்திற்கு சமைத்து சாப்பிடத்தெரியாததால் விலங்கினத்தைப் போல் பச்சைக்கறியாகவே இறைச்சியை உண்பார்கள்.இவ்வாறு வாழ்வியல் உணவுப் போராட்டம் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.இதன் அடிப்படையில் ஒவ்வொரு உயிரினமும் அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தன.மானுடத்தின் படிப்படியான பரிணாம வளர்ச்சியில், இயற்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏன்,எதற்கு,எப்படி என்ற வினா எழுந்தது. இதுவே ஆறாவது அறிவு என்று போற்றப்படுகிற பகுத்தறிவு ஆனது.