Tuesday 28 October 2014

தனித்தன்மையான ஆலயப்பரிகாரங்கள் சோதிடவியலில் இல்லை.

மதிபிற்குரிய போடிநாயக்கனூர் சோதிடப்பெரியோர் திரு.பாஸ்கரன் அவர்களுக்கு வணக்கங்கள். ஆலயப் பரிகாரத்திற்கான சுருக்கமான பதில்.
ஆலயப் பரிகாரம்: தமிழகத்தில் உள்ள ஆலயங்கள் மூன்று பிரிவுகளில் காணப்படுகின்றன. அவை இனக்குழு வழிபாட்டுச் சமயத்தைக்குறிக்கும் குலதெய்வஆலயங்கள்.2.சைவத்திருத்தலஆலயங்கள்.3.வைணவத்திருத்தல ஆலயங்கள் என்றுள்ளன. இவை மூன்றிற்கும் பொதுவாக வேள்வி வழிபாடு செய்யும் இந்து சமய அமைப்பும் உள்ளன. எனவே தமிழகத்தில் நான்கு பிரிவுகளிலும் வழிபாடு செய்யும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.( பிற மதத்தினர் இங்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.)
ஆலயத்தின் அடிப்படைக்கோட்பாடு புனிதம்—தீட்டு என்பதாகும். இந்த விதி அனைத்து சமயத்தினருக்கும் பொதுவானதாகும்.இவ்வாறு பிரிக்கப்பட்டதில் ஆலயம், ஆலயத்திற்கு இனணயான பகுதிகள்,பஞ்சபூதங்கள்,மானுடத்தின் நற்செயல்கள் போன்றவை புனிதமானதாகவும். ஆலயத்திற்கு இணையில்லாத பகுதிகள், மானுடத்தின் தீய செயல்கள்,போன்றவை தீட்டானதாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஆலயங்களின் (சமயங்களின்) வேலை என்பது தீட்டை, புனிதமாக்குவதாகும். மானுடத்தின் தீயசெயல்களினால் அவர்களுக்கு தீட்டு ஏற்படுகிறது. தீட்டினால் மானுடம் பாவமடைகிறது. அவ்வாறு பாவமடைந்த மானுடத்தை பாவத்திலிருந்து விடுபடும் (பாவமன்னிப்பு) வழியாக ஆலயவழிபாட்டிற்கு உட்படுத்தி புனித நீர்களை தெளித்து, பாவமற்ற புனிதராக்குவதே ஆலயவழிபாடாகும். புனித நீர் தவிர்த்து, ஆலயத்தில் இறைவனுக்குப் படைக்கப்படும் பலி பொருட்களும் புனிதப்பொருட்களாகும். இவற்றை மானுடம் ஏற்றுக்கொண்டால் அவர்புனிதர் ஆவார்.
1.குலதெய்வ வழிபாட்டில் ஆடு,கோழி போன்றவை பலியிடப்பட்டு அவற்றை இறைவனுக்குப் படைக்கின்றனர். பின்னர் படைக்கப்பட்ட பொருளை இறைவன் ஏற்றுக்கொண்டார் என்ற நம்பிக்கையில்,மக்கள் அனைவரும் அப்பலி பொருளை உண்டு மகிழ்ந்து பாவத்தை நீக்கிக்கொள்வர். ஒருசில குலதெய்வ ஆலயங்களில் சைவப்பொருள்களையும் படைத்து வழிபடுகின்றனர்.
2.புனித இந்து சமய வேதங்களான இருக்கு,யசூர்,சாம,அதர்வங்களில் கூறியுள்ளபடிவேள்விஇயற்றும்மந்திரங்களும்,இறைவணக்கங்களும்,பலியிடுதலும் போன்ற சடங்குகள் நிகழ்த்தப்பட்டு பலிபொருளை இறைவன் ஏற்றுக்கொண்டார் என்ற அடிப்படையில் தாங்களும் உண்டு மகிழ்ந்து பாவத்தை நீக்கி புனிதராவர்.
3.புனித சைவத்திருத்தல ஆலயங்களில் பன்னிருதிருமுறைகள்,சைவ சாத்திரம்,ஆகமம், வழிபாட்டு நூல்களில் கூறியுள்ளபடி இறைவழிபாடுகள் செய்யப்பட்டு புனிதமான பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றை மானுடம் ஏற்றுக்கொண்டால் பாவங்கள் நீங்கி புனிதராவர்.
4.வைணவத்திருத்தல ஆலயங்களில்,இச்சமயத்திற்குரிய ஆகமம்,வழிபாடு, சாத்திரம்,தத்துவங்களின்படி இறைவழிபாடுகள் நிகழ்த்தப்படுகின்றன. இந்த ஆலயங்களிலும் அனைத்து பாவமுள்ள மானுடத்திற்கும் புனிதப்பொருள்களைக் கொடுத்து அவர்களை புனிதராக்குகின்றனர்.
இந்த ஆலயங்கள் அனைத்தும் தமது பிரிவிற்கு தகுந்தாற்போல் இறை பிரசாதப்பொருள்களை மானுடத்திற்கு வழங்குகின்றன. இவற்றிற்கு விலையேதும்இல்லை.(தீர்த்தம்,திருநீறு,குங்குமம்,சந்தணம்,பிரசாதங்கள்,படையல் பொருட்கள்) இவற்றை ஏற்றுக்கொண்டாலே செய்த பாவமெல்லாம் போய்விடும் எனும்பொழுது எதற்காக பணத்தை செலவழித்து சாந்தி பரிகாரச்சடங்குகளை நடத்தவேண்டும்.
ஆலய வழிபாடுஎன்பது பொதுவாக இருக்கும் பொழுது, சிறப்பு தெய்வவழிபாடு என்பது எதற்கு? அனைத்து ஆலயங்களிலும் எம்பெருமான் குடிகொண்டிருப்பார்தானே! சோதிடத்தில் ஒவ்வொரு தோசமாகச்சொல்லி அந்தகோயிலுக்குசென்றால் பரிகாரம் ஆகிவிடும் என்று எப்படிச்சொல்லமுடியும்.உண்மையில் உங்கள் ஊரில் உள்ள இறைவனை நம்பாமல் வேறு ஒரு ஊருக்கு அனுப்புவது எப்படிச்சரியாகும். (நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் எந்த ஊருக்கும் செல்வதற்கு வாய்ப்பு இல்லை.  அவரவர் ஊர்க்கோயிலில் தான் வழிபட்டு இருப்பர்.)
பாவமன்னிப்பு,பரிகாரம் என்பதெல்லாம் இறை நம்பிக்கையில் செய்யப்படும் செயலாகும்.நடந்தாலும்,நடக்காவிட்டாலும் மக்கள் கவலைப்படாமல் திரும்பவும் ஆலயங்களுக்கு போய்கொண்டுதான் இருப்பர். எனவே சாதாரண வழிபாட்டிலேயே பாவபரிகாரம் அடையும் மானுடத்தை, சோதிடவியல் தோசங்களை பெரிதாகக்கூறி மக்களிடம் ஏன் பணத்தைப் பிடுங்கவேண்டும். எனவேசோதிடத்தின் கோள்களின் அடிப்படையில் ஆலயவழிபாடு செய்விப்பதெல்லாம் மக்களை திசை திருப்பும் வேலையே. ஆலயவழிபாடு என்பது மானுடத்தின் பொதுக்கடமையாகும். குறிப்பிட்ட தோசபரிகாரம் என்பதெல்லாம் கோயில்களில் கிடையாது. அனைத்தும் இந்து,சைவம்.வைணவம்.குலதெய்வக் கடவுள்களாகும். இவற்றில் முதன்மைக்கடவுளாக அச்சமயத்தின் முதற்கடவுளே இருப்பர். ஆதலால் எந்த ஆலயத்திற்கு சென்றாலும் அவரவர் விதிப்படியே நடைபெறும்.விதியை வாசிப்பதே சோதிடக்கலையாகும்.மாற்றுவது அல்ல. மற்றவை நூலில்.