Friday 12 December 2014

வேதகால முகூர்த்தங்களும் - தற்கால முகூர்த்தங்களும் -ஒரு பார்வை. 12-12-2014.

வேதகால முகூர்த்தங்களும், தற்கால முகூர்த்தங்களும்- ஒரு பார்வை.

இந்து சமய வேதங்களில் கூறப்பட்டுள்ள இறை வழிபாட்டுச் சடங்குகள், வேள்வி இயற்றி அக்னி சாட்சியாகச் செய்யப்படுவதாகும். இவற்றிற்கு பொதுவான காலங்களூம், குறிப்பிட்ட முகூர்த்தகாலங்களும் தேர்ந்தெடுக்கப் பட்டு வழிபாடுகள் நிறைவேற்றப்பட்டன.
பொதுவாக அனைத்து வழிபாடுகளும் பகலில் சூரிய உதயத்திலிருந்து, நடுப்பகலிற்குள் செய்யப்படவேண்டும். இது பொதுவிதியாகும்( உண்மையில் பிரம்ம முகூர்த்தம் என்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னர் செய்யப் படும் சடங்குகள் முகூர்த்த சாத்திரத்தில் கூறப்படவில்லை.). வேதகாலத்தைப் பொறுத்தவரை பகலிலேயே சடங்குகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தொடக்கத்தில் திதியை (திதி என்பதே தற்காலத்தில் தேதி என்று மாறியுள்ளது.) கொண்டு வழிபாடுகள் செய்யப்பட்டு வந்தன. பின்னர் கால வளர்ச்சியினால் முகூர்த்தங்கள் கண்டு பிடிக்கப்பட்டு அதன் வழியாக சடங்குகள்,வழிபாடுகள் நிறை வேற்றப்பட்டன.
வேதகால முகூர்த்தப் பெயர்கள்:

பகலிறவு கொண்ட ஒரு நாளுக்கு முப்பது முகூர்த்தங்கள் ஏற்படுத்தப் பட்டன. இவற்றில் வளர்பிறை பதினைந்து நாட்களுக்கு தனியாகவும், தேய்பிறை பதினைந்து நாட்களுக்கு தனியாகவும் முகூர்த்தங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

வளர்பிறை முகூர்த்தப் பெயர்கள்      தேய்பிறை முகூர்த்தப்பெயர்கள்
பகல் --------        இரவு                      பகல் ----------- இரவு             
சித்ர             தாதா                 சவிதா             அபிசாஸ்தா
ஹேது           ப்ரதாதா              ப்ரசவிதா           அனுமந்தா
பிரபான்          அனந்த               தீப்த               அனந்த
அபான்             மோத                திபயன்             மோத
ஸம்பான்           ப்ரமோத             திப்யமான          ப்ரமோத
ஜ்யோதிஸ்மான்    அவெஸன்           ஜ்வலன்           அஸாதயன்
தேஜஸ்வான்       நிவெஸயன்         ஜ்வலிதா           நிசாதயன்
அதபான்            ஸம்வெஸன்        தபான்            ஸம்ஸாதன்
தபான்              ஸம்ஸன்தா        விதபன்           ஸம்ஸன்னா
நபிதபான்           ஸன்தா             ஸன்தபன்          ஸன்னா
ரோகன             அபவன்              ரோகன            அபூ
ரோகமான          பிரபவன்            ரோகமான           விபூ
சோபன            ஸம்பவன்           ஸம்பூ               ப்ரபூ
சோபமான         ஸம்பூத              சும்பமான           ஸம்பூ
கல்யாண          பூத                  வாம                புவ.

 ஆகியவை வேதகால முகூர்த்தப் பெயர்களாகும்.

வேத காலத்தில் இராசிகள், பாவகங்கள் கண்டுபிடிக்கப்பட வில்லை. ஆதலால் ஒரு நாளினை முப்பது பிரிவாக பிரித்து காலத்தை கணித்துள்ளனர். தற்பொழுது கணிக்கப்படும் நாழிகை, மணிகள் எல்லாம் அப்பொழுது இல்லை. அப்பொழுது காலத்தைகுறிக்கும் சொல்லாக முகூர்த்தம் என்றுள்ளது. இவற்றில் நல்லமுகூர்த்தகாலமென்றும் ,தீய முகூர்த்தகாலமென்றும் பிரித்து பார்த்து செயல்களைச் செய்துள்ளனர். 

தற்காலக் கணிதப்படி வேதகால முகூர்த்த காலத்தின் அளவு நாற்பத்துயெட்டு நிமிடங்களாகும்.(இரண்டு நாழிகைகளாகும்.) மேலே குறிப்பிடப்பட்டுள்ள முப்பது முகூர்த்தப்பெயர்களில் நல்ல முகூர்த்தங்களும், தீய முகூர்த்தங்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த முகூர்த்தம் பார்க்கும் அமைப்பு வேதகாலத்திற்குப் பின்னர், இதிகாசம்,புராணகாலம்,கிருஹ்ய ஸூத்ரகாலங்களிலும், மனு ஸ்மிருதி, யக்ஞவல்கிய ஸ்மிருதி காலங்களிலும் பயன் படுத்தப்பட்டுள்ளன. பின்னர் இராசிகளும்,பாவகங்களும் கண்டுபிடிக்கப்பட்டபின், இப்பெயருடன் கூடிய முகூர்த்த காலங்கள் கைவிடப்பட்டன.

தற்கால முகூர்த்தங்கள்

தற்கால முகூர்த்தம் என்பது ஏறத்தாழ 1000 ஆண்டுகள் வளர்ச்சியாகும். முகூர்த்தவிதிகளில் கூறப்பட்டுள்ளபடி ஒரு நல்ல காலத்தை தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் அரிதானதாகும். எண்ணிலடங்காத முகூர்த்த விதிகள் எழுதப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் குறிப்பிட்டால் பல நூல்கள் எழுத வேண்டியது இருக்கும். இருப்பினும் முகூர்த்த விதிகளை தேர்ந்தெடுப்பதற்கு உரிய சில காரணிகளை இங்கு குறிப்பிடுகிறேன்.

திதி. நட்சத்திரம், வாரம், யோகம்,கரணம்,அமிர்தாதி யோகங்கள்,இலக்னம், பாவகம்,கோள்கள்நிலை,தியாஜ்யங்கள்,நேத்திரம்,ஜீவன்,வாரசூலை,யொகினி, தனியநாள்,கரிநாள்,இலத்தை,திரிதினஸ்பிர்க்கு,அவமாகம்,மேல்நோக்குநாட்கள்.கீழ்நோக்கு நாட்கள்,சம நோக்குநாட்கள்,இராகுகாலம்,எமகண்டம், கௌரி பஞ்சாங்கம்,பஞ்சகம்,போன்றவை தற்போது பயன்படுத்துவதாகும். 

பயன்படுத்தாத முகூர்த்தவிதிகள் நூற்றுக்கணக்கில் நூல்களில் உள்ளன.அவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால் ஒரு முகூர்த்த நேரத்தை தேர்ந்தெடுப்பது என்பது இயலாத செயலாகும்.
எனவே மேலே குறிப்பிடப்பட்ட விதிகளில் முதன்மையானவற்றை தேர்ந்தெடுத்து செயல்களைச் செய்யலாம்.

முகூர்த்தநேரம் என்பது குறிப்பிட்ட செயலிற்கு இடையூறு வருவதை தடுக்குமே தவிர, செயலின் எதிர்காலத்தன்மையை வெளிப்படுத்தாது.

அனைத்து எதிர்காலப் பலன்களும் அவரவரின் சாதகப்படியே நடைபெரும்.              

மிக்க நன்றி.

Professor. Dr.T.Vimalan.   12-12-2014.