Monday 6 April 2015

உங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 4--நாபஸ யோகங்கள்..06-04-2015.


உங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 4


அன்புடன் அனைவருக்கும் வணக்கம்.......

6.கதயோகம்;

அனைத்துக் கோள்களும் இரண்டு அடுத்த கேந்திர பாவங்களில் இருந்தால் கத யோகமாகும்..
அடுத்த கேந்திர பாவகம் என்பது 1.இலக்னமும்,நான்காம்பாவமும் அல்லது 2.நான்காம் பாவமும்,ஏழாம் பாவமும் அல்லது3. ஏழாம்பாவமும்,பத்தாம்பாவமும், அல்லது 4.பத்தாம் பாவமும்,இலக்னபாவமும் ஆகும்.

கதயோகப் பலன்கள்

இந்த யோகத்தில் பிறந்தவர் செல்வந்தராவார். அனைத்து காலங்களிலும் செல்வந்தேடும் முயற்சி உடையவராகவும் இருப்பார்.. ஆன்மீகப் பற்றுடன் வாழ்வார். ஆன்மீக செயல்பாடுகள் உடையவராவார்.

சிறப்புப் பலன்கள்;

சொல்லப்பட்டிருக்கும் இரண்டு கேந்திரங்களில், எதில் கோள்கள் அதிகமாக இருக்கிறதோ அப்பாவகத்தின் செயல்கள் கலப்பு பலன்களாகவும்,கோள்கள் குறைவாக இருக்கக்கூடியப் பாவங்களில் இருக்கும் கோள்களின் காரகங்களும்+ பாவகத்தின் காரகக் குணங்களும் கூதலாக செயல்படும் என்று அறிந்து கொள்க.
இவற்றில் தீயகோள்களின் செயல்கள்,அவை இருக்கும் கேந்திரத்தின் அடிப்படையில் பாதிப்பை ஏற்படுத்துவனவாக அமையும்.

7.சகட யோகம்;

அனைத்துக் கோள்களும் இலக்னம் மற்றும் ஏழாம் பாவத்தில் இருந்தால் சகடயோகமாகும்.

சகடயோகப்பலன்கள்;

இந்த யோகத்தில் பிறந்தவர் வண்டி வாகனத் தொழில் செய்பவராக இருப்பார். பெருந்தன்மை இல்லாத மனைவியையுடையவராவார். நோயாளியாகவும் இருப்பார்.

சிறப்புப் பலன்கள்;

பொதுவாக இலக்னத்தில் கோள்கள் இருப்பது நன்மையென்றால், ஏழில் கோள்கள் இருப்பது அவ்வளவாக நன்மை கிடையாது.. எனும் பொழுது அவர்களுக்கு ஏற்படும் துன்பப் பலன்கள், நமது கணிதத்திற்கும் அப்பாற்பட்டவையாகவே ஏற்படும். அதனால் ஏழில் உள்ள கோளின் குணத்திற்கு ஏற்ப பலன்களை யூகித்துக் கூறுதல் வேண்டும்.
இக்கட்டுரையில் ஒவ்வொரு பலனாக எழுதமுடியாது என்பதால் உங்கள் யூகத்திற்கு கொடுத்து விட்டேன்…

8.விஹக யோகம்;

அனைத்துக்கோள்களும் 4 ஆம் பாவத்திலும், 10ஆம் பாவத்திலும் இருந்தால் விஹக யோகமாகும்.

விஹகயோகப்பலன்கள் ;

இந்த யோகத்தில் பிறந்தவர் அனைத்து செய்திகளையும் கூறும் தொழில் செய்பவராவார். பயணத்தில் நாட்டமுடையவராவார். கலகம் செய்வதில் விருப்பமும் இருக்கும்.

ஒவ்வொரு இலக்னத்திற்கும் 4,10 ஆம் பாவங்கள் யாரென்றும்,அங்கு எந்தெந்த கோள்கள் இருந்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்று சோதிடவியலின் அடிப்படை நூல்களைக் கொண்டு ஆய்ந்துணர்ந்து பலன்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்……..

9. ஸிரிங்காடக யோகம் ;

அனைத்துக் கோள்களும் 1,5,9 ஆகிய திரிகோண பாவகங்களில் இருந்தால் ஸிரிங்காட யோகமாகும்.

ஸிரிங்காடக யோகப்பலன்கள்;

இந்தயோகத்தில் பிறந்தவன் முதுமையில் சுகமாக வாழ்வான். மற்ற வயதுகளில் சில துன்பங்களை அனுபவிப்பான்…

இப்பலன்களை கோள்களைக்கொண்டு பிரித்துப் பலன்களைக் காணுங்கள்…..

10.ஹலயோகம்;

 அனைத்துக் கோள்களும் மற்ற திரிகோண பாவங்களில் இருந்தால் ஹலயோகமாகும்.
மற்ற திரிகோணங்கள் என்பது 2,6,10 ஆம் பாவங்கள், 3,7,11ஆம் பாவங்கள், 4,8,12 ஆம் பாவங்கள் கொண்ட மூன்று பாவங்களாகும்…..

ஹல யோகப்பலன்கள்;

இந்த யோகத்தில் பிறந்தவர் நிலத்தை உழுது பயிரிட்டு அதன் வழியாக வாழ்க்கை நடத்துபவராக இருப்பார். ((( பொதுவாக கலப்பு பாவகங்களில் கோள்கள் இருந்தால் உழைப்பாளி என்பதை தெளிவாகக் கூறியுள்ளார்.)))))))

11.வஜ்ரயோகம்;

நற்கோள்கள் இலக்னத்திலும்,ஏழாம் பாவத்திலும் இருந்து, —தீயகோள்கள் நான்காம் பாவத்திலும்,பத்தாம்பாவத்திலும் இருந்தால் வஜ்ரயோகமாகும்.

வஜ்ர யோகப்பலன்கள்;

இந்த யோகத்தில் பிறந்தவர் குழந்தையிலும்,  முதுமையிலும், அனைத்து சுகங்களையும் அனுபவிப்பவராகவும், மக்கள் செல்வாக்கைப் பெற்றவராயும், வீரமுடையவராகவும் திகழ்வார்….

12. யவயோகம் ;

தீயகோள்கள் இலக்னத்திலும், ஏழாம் பாவகத்திலும் இருந்து – நற்கோள்கள் நான்காம் பாவத்திலும், பத்தாம் பாவத்திலும் இருந்தால் யவயோகமாகும்.

யவயோகப்பலன்கள் ;

இந்த யோகத்தில் பிறந்தவர் இளமைக்காலத்தில் சுகபோகங்களை அனுபவிப்பராக இருப்பார். வீர, தீரத்துடனும் செயல்படுவார்….

13.பத்ம யோகம் ;

அனைத்துக் கோள்களும் நான்கு கேந்திர பாவங்களில் இருந்தால் பத்ம யோகம் அல்லது கமலயோகமாகும். ( தீயகோள்கள்+ நற்கோள்களின் கலப்பு நிலை)

பத்ம யோகப்பலன்கள் ;

இந்த யோகத்தில் பிறந்தவர் எல்லையற்ற இன்பங்களை அனுபவிப்பவராகவும், எங்கும் புகழுடன் இருப்பவராகவும், அனைத்து வித்தைகளையும் அறிந்தவராகவும் இருப்பார்…

14.வாபியோகம் ;

அனைத்துக் கோள்களும் பணபரத்திலிருந்தாலும் ( 2,5,8,11,ஆம் பாவங்கள் பணபரம்) அல்லது ஆபோக்கிலியத்தில் இருந்தாலும்( 3,6,9,12 ஆம் பாவங்கள் ஆபோகிலியம்) வாபியோகம் என்று அழைக்கப்படும்.

வாபியோகப்பலன்கள்;

இந்த யோகத்தில் பிறந்தவர் பலகாலங்கள் சுகமற்றவராகவும், கருமியாகவும் வாழ்வார்.  செல்வங்களை நிலத்தில் புதைத்து வைப்பவராகவும் இருப்பார்கள்…. அற்ப சுகவாசி….

15.யூபயோகம்;

அனைத்துக் கோள்களும் இலக்ன முதல்  வரிசையாய் நான்கு பாவங்களில் இருப்பது யூபயோகமாகும்… ( 1,2,3,4,)

யூபயோகப்பலன்கள்;

இந்த யோகத்தில் பிறந்தவர் அரசரைப் போல் மிகப் பெறும் செயல்களைச் செய்பவராகவும், யாகங்களை செய்வதில் பெயரும் புகழும் அடைபவராவார். எப்பொழுதும் தயாள குணத்துடன் வாழ்பவராவார்.

16. இஸூ யோகம்

அனைத்துக் கோள்களும் நான்காம் பாவ முதல் வரிசையாய் நான்கு பாவங்களில் இருப்பது இஸூ யோகம் அல்லது பானயோகமாகும். ( 4,5,6,7 ).

இஸூ யோகப்பலன்கள்;

இந்த யோகத்தில் பிறந்தவர் இம்சை செய்வதில் விருப்பமானவரும், போர்க்கருவிகளைச் செய்பவராகவும் சிறைச்சாலைகள் போன்ற இடங்களில் பணி செய்பவராகவும் இருப்பார்…..

17.சக்தியோகம்

அனைத்துக் கோள்களும் ஏழாம் பாவமுதல் வரிசையாய் நான்கு பாவங்களில் இருப்பது சக்தியோகமாகும்.

சக்தியோகப் பலன்கள்;

இந்த யோகத்தில் பிறந்தவர் தன் குலத்திற்கு தாழ்ந்த தொழிலை செய்பவராவார். செயலில் திறமையற்றவராவார். மகிழ்ச்சி என்பது சிறிதும் இல்லாதவர். செல்வமும் இல்லாதவராவார்….

18.தண்ட யோகம்.

அனைத்துக் கோள்களும் பத்தாம் பாவமுதல் வரிசையாய் நான்கு பாவங்களில் இருப்பது தண்ட யோகமாகும்.

தண்ட யோகப்பலன்கள்;

இந்த யோகத்தில் பிறந்தவர் கீழ்நிலைப் பணியாளராகவும் , தனது நெருக்கமான உறவினர்கள், நண்பர்களை விடுத்து தனிமையில் வாழ்பவராகவும் இருப்பார்…


நாபச யோகங்களில் 18 யை விளக்கியுள்ளேன். இன்னும் உள்ள 14 யோகங்களை அடுத்த தலைப்பில் விளக்கிய பின்னர் இந்த யோகங்களைப் பற்றிய கருத்துரையை எழுதுகிறேன். நன்றி…. நாளை சந்திப்போம்…..



Professor Dr.T.Vimalan. Ph.D. 06-04-2015.