Tuesday 21 April 2015

நவக்கிரகம்-இனக்குழு சமயம் – குலசாமி - /// 21-04-2015..


இனக்குழு சமயம் – குலசாமி - நவக்கிரகம்.

அன்புடன் அனைவரையும் எனது பிளாகில் வரவேற்கிறேன்.

சமயம் {மதம்} ;

மதம் என்பது, மனிதனையும் கடவுளையும் இணைக்கும் கண்ணி ஆகும். கடவுளால் விதிக்கப்பட்டு , கடவுள் நம்பிக்கையுள்ளவரைக் கட்டுப்படுத்துகிற நடத்தை பற்றிய விதிகள் ,சூத்திரங்கள்,வழிபாடுகள்,சடங்குகள்,கோட்பாடுகள் ஆகியவற்றின் கூட்டுத் தொகுதிதான் மதம் ஆகும்…..மதம் என்பதை தமிழில் ”சமயம்” என்று கூறுகிறார்கள்….

சமயங்களை இரண்டு முக்கிய பிரிவாக உள்ளன. அவை 1. இனக்குழுசமயம்..2. நிறுவன சமயங்களாகும்….
இந்த பகுதியில் இனக்குழு சமயத்தை விளக்குகிறேன்…..

1.இனக்குழு அல்லது நாட்டுச் சமயங்கள்…. \

இனக்குழுசமயங்கள் நிறுவனமற்றதாகும்.வரலாற்றில் பழமை வாய்ந்ததாகும்..கி.மு6000 த்திலிருந்து இன்று வரை இச்சமய வழிபாடு இன்றும் தொடர்கிறது.இதன் அடிப்படையில் நமது கிராமங்களில் பலவித குலதெய்வ வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இச்சமயம் இயற்கையோடு மிக நெருக்கமாக ஒன்று படுத்திய வாழ்க்கை முறையை நடத்தி செல்கிறது..

வாழ்வியல் முறை

இவர்கள் காவல் தெய்வங்கள் போன்ற பல தெய்வ வழிபாடுகளை கொண்டு இருந்தனர். உணவு சேகரிப்பு முக்கிய பணியாகும். மீன், கிழங்கு,தேன்,பழம், காய் என உணவை சேகரித்து பின்பு பகிர்ந்து உண்டனர்…கூட்டு பண்புடன் கூட்டம் கூட்டமாக ஒர் இனக்குழுவாக வாழ்ந்தனர்… ஒரே இரத்த உறவு கொண்டவர்களாகவும், மூடிய வாழ்க்கையுடையவர்களாகவும், தங்கள் கூட்டங்களுக்குள் விசேச பரிவர்த்தனை இல்லாதவர்களாகவும் இருந்தனர்…தங்களுக்குள் திருமணம் முடித்தனர். ஒருதார மணம் கிடையாது…தாய்வழி இரத்த உறவுகள் தான் இம் மக்களின் பரம்பரையாக எடுத்துக் கொள்ளப்பட்டன….

பெண்களே பெரும்பாலும் இனக்குழுக்களின் தலைவராக இருந்துள்ளனர். தாங்கள் வாழும் இடம், மரம், கல்,பூமி, ஆகியவற்றை புனிதமாக போற்றினர்..இனக்குழுவின் தலைவரே மாந்திரீகர், புரோகிதர்,சோதிடர்,வைத்தியர்,ஆசிரியர்,சாமியார் போன்ற அனைத்து அதிகாரங்களும் உடையவராவார்….

சமய நம்பிக்கை;

இனக்குழுவினர் ஒரே குலம், ஒரே இரத்த உறவு கொண்டவர்களாக இருப்பதால் , தோற்றத்தில் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பர்….தங்கள் குழுவிற்கு தனியாக ஒரு குறியீடு ஏற்படுத்திக் கொள்வர்….மலை,பசு,சூரியன்,சந்திரன்,தண்ணீர்,மரம்,பறவை,விலங்கு,என குழுவை அடையாளப் படுத்திக் கொள்வர். இந்த குலக் குறியீடுகள் மிக மிகப் புனிதமானவையாகும். இனக் குழுவின் புனித சின்னமாகும்…தங்களுடைய நாடி, நரம்பு, உயிர் ஆகிய அனைத்தையும் குலகுறியுடன் தொடர்பு படுத்தி வாழ்ந்து வந்துள்ளனர்…

ஒரு இனக்குழுவிற்கு மரம் குலக்குறியீடாக இருந்து ,அதை யாராவது வெட்டினால் தலைவருக்கு வலிக்கும் என்று நம்பினர்… எனவே அனைத்து வகைச் செயல்களும் குலக் குறியீட்டை மையமாக வைத்தே நடத்தியுள்ளனர்… தங்களுடைய எண்ணம்,சிந்தனை,செயல், ஆகிய அனைத்தும் குலக்குறியீட்டை அடிப்படையாகக் கொண்டதால் அனைத்திற்கும் உருவம் உண்டு என்று நம்பினர்….

இனக்குழுவின் குலக்குறியிடு ஒரு விலங்காக இருந்தால் திருவிழா போன்ற நாட்களில் அதை வேட்டையாடுவார்கள். பின்பு அந்த விலங்கை அனைவரும் பகிர்ந்து உண்ணுவார்கள்…இதனால் குலக்குறியீடுடன் தங்களது இரத்த உறவை ஏற்படுத்திக் கொள்வார்கள். ஏனெனில் குலக்குறியிடு நாளடைவில் கடவுளாக வழிபட்டு வந்தமையால், கடவுளும் இவர்களுடன் இரத்த உறவு வைத்துக் கொண்டுள்ளார் என்ற நம்பிக்கையில் அவ்வாறு பகிர்ந்து உண்ணப்பட்டது….ஆனால் மற்ற நாட்களில் அவ்விலங்கை வேட்டையாடக் கூடாது என்ற கட்டுப்பாடும் இருந்துள்ளது….

இவர்களுடைய வாழ்வு முறை சுழற்சிவிதியின் படி அமைந்துள்ளது…தங்களது குழந்தைகளுக்கு தாத்தா பெயர்,அப்பா பெயர்,பாட்டிபெயர், என திரும்ப, திரும்ப ஒரெ பெயரே வைக்கப்பட்டது. கிறித்துவத்தில் அப்பமும்.ரசமும், பகிர்ந்து கொண்டதால் இயேசுவின் இரத்தம் ,சதையை உட் கொண்டதாக அமையும்..அவர் உள்ளிருந்து நம்மை காப்பாற்றுவார் என்று நம்பப் படுகிறது…

கிராம விழாக்களில் பலி,படையல்,கூட்டு உணவு இறைவனுக்குப் படைக்கப்பட்டு,,,பின்னர் மானுடத்தால் உண்னப்படுகிறது. இதன் மூலமாக இறைவனுக்கும், மானுடத்திற்கும் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.

”பகவான்” என்ற சொல் பாகம், பங்கு என்று பங்காளி போல் இறைவனுக்கும் பக்தர்களுக்கும் நெருங்கிய உறவு இருப்பதாக கருதி இறைவனை பகவான் என்ற சொல்லால் அழைக்கிறோம்

 ஆவி,மந்திரக் கோட்பாடு

உலகில் உள்ள அனைத்திற்கும் உயிர் உண்டு என்றும் சிலவற்றிற்கு அடர்த்தியான உயிர் தன்மை உண்டு என்று நம்பினர்… மலை முகடு,பச்சைமரம், வீட்டின் மூலைப்பகுதி, மரங்களின் உச்சிக்கிளை, நடுப்பகல்,நடுஇரவு, பிறப்பு ,பருவமடைகிற வயது, கருக்கல் நேரம், கிழக்கும்-மேற்கும் சந்திக்கும் பகுதி என இரட்டை தன்மையுடன் கூடிய நிகழ்வுக்கு ஆவித்தன்மையை ஏற்றி, அதில் ஆவிகள் வசிப்பதாகவும் நம்பினர். அதனிடத்தில் பயமும்,பக்தியும் கொண்டிருந்தனர். இடில் பக்தியைவிட பயமே அதிகமாக இருந்தது. செய்வினையின் போது ஆவிக்கோட்பாட்டின்படி அதற்கு உயிர்தன்மை உள்ளது என்று நம்பினர்…

தன் இனக்குழு மக்களின் அறிவியல்,இயற்கை சார்ந்த.ஒன்றை பாவனை செய்வது மந்திரம் ஆகும். { ஆனி மாதத்தில் மழை வரவில்லை என்றால் மழை வரத் தூண்டுவார்கள்.அதற்காக பாவனைச் சடங்கு செய்வது மந்திரம் எனப்பட்டது. மழை வேண்டி களிமண் உருண்டையை மரத்தின் கீழ் வைப்பார்கள். பின்னர் அம்மரத்தின் மேல் பகுதியில் தண்ணீரைத் தெளிப்பார்கள். இம்மாதிரி பாவனைச் சடங்குகள் மூலம் மழை வரத் தூண்டுவார்கள்… இதனால் இயற்கை மழை வரும் என்று நம்பப்பட்டது.} தற்பொழுது செய்வினை பற்றிய கருத்துக்கள் அனைத்தும் இதன் அடிப்படையில் வந்ததாகும்.

குறியீட்டுத் தளம்..

இனக்குழு சமயத்தில் அடர்த்தியான குறியீட்டுத்தன்மை இருந்தது. திருமணம்,பிறப்பு, அனைத்திற்கும் சடங்குகள் இருந்தன..வாழ்க்கையின் பிரச்சனைகள் அனைத்தும் குறியிட்டுத்தளத்திற்கு சென்றுவிடும்… நோய்களினால் ஏற்படும் துன்பங்கள்,மானுட மனதில் ஏற்படும் அச்சங்கள் போன்ற அனைத்தும் குறியீட்டுத்தளத்திற்கு சென்றுவிடும்…{ எ.கா} வாழ்வில் தீய நிகழ்வுகள் ஏற்பட்டால்,,,,புதியதாக ஏதாவது வாங்கினாயா? அல்லது செய்தாயா/ போன்ற வினாக்கள் குறியீட்டுத்தளத்தில் கேட்பார்கள்….

புனிதம்-புனிதமற்றது…

சமயங்களின் அடிப்படை ஆணிவேர் புனிதம்-புனிதமற்றது என்ற இரண்டு பிரிவுகளாகும்…
நல்லது.கெட்டது, திசைகள், நேரம், செயல்கள், கிழமைகள்,,குணம்,சகுனம்,ஆகிய அனைத்திலும் புனிதம்-புனிதமற்றது என்ற இரண்டு தன்மைகளும் இனக்குழு சமயத்திலிருந்தே பார்க்கப் பட்டன. இதனடிப்படையிலேயே உயர்ந்தது-தாழ்ந்தது என்ற கருத்துக்கள் தோன்றின.

இனக்குழு சமயத்தின் பண்புகள்..
இனக்குழு சமயத்திற்கு என்று மூலநூல் இருக்காது..
சமய கட்டமைப்பு,கட்டுப்பாடுகள் கிடையாது.
அதிகாரம், எல்லைகள் முடிவு செய்யப்படாது.
படைப்புத்தன்மை இருக்கும்.
புதுப் புது உத்தரவுகள், சிந்தனைகள் கூடியவளர்ச்சி நிலை பங்கேற்பு தன்மையிருக்கும்.
சமரசம் செய்து கொள்ளலாம்
பக்தி இருக்கும் ,பணிவு இருக்க வேண்டியது இல்லை..
மூலத்தை மாற்ற முடியும்..  இதுவே இனக்குழு சயங்களின் பண்புகளாகும்..

தற்பொழுது நாம் கிராமங்களில் வழிபடும் குலசாமி வழிபாடுகள் அனைத்தும் இனக்குழு வழிபாடுகளின் மறு அமைப்பாகும்… இப்பொழுதும் மேலே கூறப்பட்ட அனைத்து விதிகளும் நமது குலசாமி வழிபாட்டில் கடைபிடிக்கப்படுகின்றன.. இதில் கூறப்பட்ட எந்த விதியும் மற்ற சமயங்களில் காணமுடியாது…{ எடுத்துக்காட்டாக இனக்குழு சாமியைக்கூட மாற்ற முடியும்,ஆனால் மற்ற சமயங்களில் எதையும் மாற்றமுடியாது..}

நவக்கிரகம்

இனக்குழுவில் பொதுவாக அனைத்தும் வழிபடுவதால் தனியாக நவக்கிரக வழிபாடு என்று ஒன்று கிடையாது…இங்கு அனைத்தும் தங்களைக் காக்கும் குலக்குறியீடு கடவுளே தீர்த்து வைக்கும் என்று நம்புவதால் மற்ற அனைத்தையும் பிரித்து வைத்து வணங்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது…..


 அன்புடையீர் பெரியோர்களுக்கு வணக்கம்…

இந்தியாவை பொருத்தவரை காலத்தால் முந்திய சமயம் [ கி.மு6000முன்னிருந்து தற்பொழுது வரை வாழ்ந்து கொண்டிருக்கின்ற } இனக்குழு சமயமாகும்... ஆதி மானுடத்தின் சமயமும் ஆகும்.....மக்கள் ஒவ்வொரு குழுவாக பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தனர்....

அந்த வாழ்வியல் முறையில் தங்களுக்குப் பிடித்தவற்றை கடவுளாக வழிபட்டு வந்துள்ளனர்.....இங்கு சிலகட்டுப்பாடுகள், விதிகள் ஏற்படுத்தி வழிபாடுகள் செய்தனர். தங்களின் கோரிக்கைகள் நடைபெறவில்லை என்றால் கட்டுப்பாடுகளையும், விதிகளையும் மாற்றிவிடுவர்....நிரந்தரமான நூல் வடிவ விதிகள் இன்று வரை ஏற்படுத்தவில்லை....

இதில் இறைவனாக இயற்கையின் அனைத்தையும் வணங்கி வந்துள்ளனர்.....இந்த கடவுள்களை கிராமம் தோறும் காணமுடியும்....இவற்றிற்கு பூசாரிகள் என்று அழைக்கப்படும் பொது அமைப்பினரே வழிபாடுகளை செய்து வருவர்.....இங்கு நவக்கிரக வழிபாடு என்று ஒன்றும் கிடையாது. பொதுவாக தங்கள் குலம் விருத்தி அடைவதற்காக பொதுவான கடவுளை ஏற்படுத்தி வழிபட்டு வருகின்றனர்.........

.தற்பொழுது புதிதாக கட்டப்படும் கோயில்களில் வேண்டுமானால் உருவாக்கலாமே தவிர குலசாமி கோயில்களில் நவக்கிரக வழிபாடுகள் இல்லை........

மிக்க நன்றி....

Professor.Dr.T.Vimalan. Ph.D.