VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

Tuesday, 31 March 2015

உங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்-பகுதி 1 //// 31-03-2015.


உங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்-பகுதி 1

அன்புடையீர் வணக்கம்…மீண்டும் எனது பிளாகில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எனது மரியாதைக்குரிய மாணவர்களும், நண்பர்களும் கேட்டுக் கொண்டதற்கினங்க, சோதிடத்தின் ராஜயோகம் பற்றிய விளக்கங்களை தொடர் கட்டுரையாகவும் ,அவ்வப்பொழுது கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளிக்கும் அமைப்பிலும் எழுதுகிறேன்
  
நமது சோதிடவியல் சாத்திரத்தில் ராஜயோகம் என்று சொல்லக்கூடிய அரசயோகங்கள் பற்றி இந்த பகுதியில் புரிந்துகொள்வோம்..

ராஜ யோகம் அனைத்து சாதகங்களிலும் காணப்படுமா அல்லது ராஜயோகமே இல்லாத சாதகங்களும் உள்ளனவா என்ற வினாவை அனைவரும் கேட்கின்றனர்..
அதேபோல் ராஜயொகம் இருந்தால் அரசனைப் போல் வாழ்வு ஏற்படுமா என்றும் வினாவை கேட்கின்றனர்….இவ்விரண்டு வினாக்களுக்கும் விளக்கத்தை கொடுத்துவிட்டு பின்னர் ராஜயோகநிலைகளை விளக்குகிறேன்……

ராஜயோகம் ;

சோதிட சாத்திரத்தின் சிறப்பை உணர்ந்த நமது சோதிடப் பெரியோர்கள் கோள்களையும் அவை இருக்கும் பாவகத்தின் அடிப்படையும் கொண்டு ஆயிரக்கணக்கில் ராஜயோக நிலைகளைக்கூறி  ஒரு சிலவற்றுக்கு அதற்கான பலன்களையும் எழுதியுள்ளனர். உண்மையில் ராஜயோகங்கள் ஒருவரை அரசனாக்குகிறதா அல்லது அரசனுக்குரிய மரியாதையை ஏற்படுத்துகிறதா அல்லது செல்வநிலைகளை உயர்த்துகிறதா அல்லது எந்த ஒரு பலனும் தராமல் உள்ளதா என்று சிந்தித்துப் பார்த்தால் பல செய்திகள் தெரியவருகிறது.

மேற்கண்ட அனைத்து நிலைகளிலுமே மானுடர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதைக் காண முடிகிறது. எனவே ராஜயோகம் என்பது அவரவர் வாழும் சூழலுக்கும், அடிப்படை பொருளாதாரத்திற்கும்,ஏற்றாற்போல் அமைவதைக் காணமுடிகிறது..எனவே ராஜயோகம் என்பது ஒருவரது வாழ்வில் பொதுவான மதிப்பை ஏற்படுத்தும் அமைப்பு என்று முடிவிற்கு வரலாம்… அரசனும் ஆண்டியாவான் - ஆண்டியும் அரசனாவான். என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

ராஜயோகக் கோள்கள் நிலை.

ராஜயோகக் கோள்கள் நிலைகளை பல சோதிட அறிஞர்கள் கூறியுள்ள நிலையில் சில சோதிட அறிஞர்களின் கருத்துக்களை இங்கு ஆய்வாக நாம் பார்ப்போம்.
முதலில் பிருகத் ஜாதகத்தில் கூறப்பட்ட நாபச யோகங்களை இங்கு விளக்குவோம்..

நாபச யோகங்கள் ;

இந்த நாபச யோகங்களை யவனர்களின் சோதிட நூலில் இருந்து எடுத்ததாக விளக்கியுள்ளார். யவனர்கள் 1800 நாபசயோகங்களைக் கூறியுள்ளதாகவும் அவற்றை சுருக்கி 32 விதமான நாபச யோகங்களின் பலன்களை இங்கு கூறுகிறார்..   இந்த நாபசயோகங்களை நான்கு உட்பிரிவாகப்பிரித்தும் உள்ளார். அவை ஆக்ருதியோகங்கள் இருபதும், சங்கியயோகங்கள் ஏழும், ஆஸ்ரேயயோகங்கள் மூன்றும், தளயோகங்கள் இரண்டும் ஆக மொத்தம் 32 யோகங்களாகும்…..

இந்த யோகங்களில் இராகு,கேதுவை கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.. அப்படி இராகு,கேதுவை கணக்கில் கொண்டால் அவற்றை மற்ற கோளின் இணைவுடன் எடுத்துக் கொள்க…

1 ரஜ்ஜு யோகம்  

அனைத்து கோள்களும் சரராசியில் இருப்பது ரஜ்ஜுயோகமாகும்.
சர ராசி என்பது, மேசம், கடகம், துலாம், மகரமாகும். இந்த நான்கு இராசிகளிலோ அல்லது இதில் உள்ள ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்றிலோ இருக்கலாம்..

இந்த யோகத்தில் பிறந்தவர் மற்றவருடைய சொத்தில் பற்றுடையவராக இருப்பார். ஆசையுடயவராவார்..பொறாமை குணத்துடன் இருப்பார். பயணத்தில் விருப்பமுடையவர். வெளியூர், வெளிநாட்டிற்கு செல்பவராவார்…இதுவே பிருகத் சாதகத்தில் உள்ள பொதுப் பலன்களாகும்…

கூடுதலான பொதுப்பலன்களையும் காண்போம்.

மேசராசியானல்; கோபமும், தான் என்ற அகங்காரமும், தலைமைப் பண்பும், முரட்டுக்குணமும், போராடுவதும், பகைமையைப் பற்றி கவலையில்லாமலும், மக்கள் மேல் பற்றும், ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியும் உடையவராவார்.

கடக இராசியானால் அமைதியாக தனது எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ளுதலும், வேளாண்மை நிலங்களை அபகரித்தலும், சிற்றின்ப நாட்டங்களும், செயலில் வெட்கம் இல்லாமலும் அனைத்து சுகங்களை அனுபவித்தலும் ஆகும்.

துலாம் இராசியானால் தன்னுடைய தொழிலில் எதைச் செய்து முன்னேறுவதும், பெண்கள் விருப்பமுள்ளவரும், கருகியாகவும், பொது சொத்துக்களின் மேல் ஆர்வமும், அவமானமடைதலும் ஏற்படும்.


மகர ராசியானால் ; சுதந்திர எண்ணமும், மற்றவர் பொருளை சேர்ப்பதில் திறமையும், கருமியும், வெட்கமறியாமல் இருப்பதும், உச்ச பட்ச பொறாமைக் குணத்துடன் செயல் படுவதும் , தீராத ஆசையுடையவரும். வெட்கமறியாதவராகவும் இருப்பார். (நாளை சந்திப்போம்) 

         Professor  Dr.T.Vimalan Ph.D   31-03-2015.

Wednesday, 25 March 2015

சந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும்.26-03-2015. santhiya vanthanam .


                   சந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும்.

அன்புடையீர் வணக்கம்.

நமது நாட்டினர் எப்பொழுதும் சில செய்திகளை ஆராய மாட்டார்கள்.அதனால் ஒருவர் ஒரு கருத்தைக் கூறுகிறார் என்றால் அதற்குரிய உண்மையான காரணம் என்னவென்று பார்க்காமலே அப்படியே ஏற்றுக் கொண்டு விடுவர். இதானல் எழும் சிக்கலே தற்பொழுது நாம் நடத்திக் கொண்டிருக்கும் பிரம்ம முகூர்த்தம் எனும் அமைப்பாகும்……..

முகூர்த்தம் ;

இந்து சமயத்தினர் தங்களது வாழ்வியல் செயல்களைத் தொடங்குவதற்கு சில சடங்கு முறைகளை உருவாக்கியுள்ளனர்… அதேபோல் இறைவழிபாட்டுக்குரிய காலம் எதுவென்றும் உருவாக்கியுள்ளனர். இந்த காலங்களை அக்காலங்களில் முகூர்த்தம் என்றே அழைத்தனர். அம்முகூர்த்தங்களில் சடங்குளையும், இறைவழிபாட்டையும் நடத்தி வந்துள்ளனர். இதில் இறைவழிபாட்டிற்குரிய காலங்களில் சடங்குகளைச் செய்ததில்லை… செய்யவும் கூடாது. ஏனெனில் இறைவழிபாடு நடத்தப்படும் காலம்(முகூர்த்தம் ) தீயதாகும்..அந்த தீய விளைவுகளை நீக்கி நற்பலன்களை ஏற்படுத்தி தருவதற்கே இறை வழிபாடுகள் நடத்தப் படுகின்றன.

தெய்வசக்தி- தீயசக்தி;

தெய்வசக்தியாக இறைவனையும் – தீயசக்தியாக பேய் போன்றவற்றையும் எடுத்துக் கொள்க….

உலகத்தில் எத்தனையோ விசயங்கள் பிரிந்து விடுகின்றன. ஏன் கணவன் –மனைவி வாழ்க்கை கூட பிரிவு ஏற்பட்டு வாழ்கின்றனர்… ஆனால் எவராலும் பிரிக்க முடியாத உறவு ஒன்று இருக்கிறதென்றால் அது தான் தெய்வசக்தி-தீயசக்தி உறவாகும். தெய்வசக்தி இல்லாமல் தீயசக்தி வாழமுடியாது..அதேபோல் தீயசக்தி இல்லாமல் தெய்வசக்தியால் வாழமுடியாது. தெய்வசக்தியால் ஒரு பொழுதும் தீயசக்தியை முற்றிலும் ஒழிக்க முடியாது. அதேபோல் தெய்வசக்தியை துன்பப்படுத்தாமல் தீயசக்தியினால் இருக்கமுடியாது.  இதில் எவர் பெரியவர் என்று முடிவிற்கு வர முடியாது. இருப்பினும் தெய்வசக்தியும் ,தீயசக்தியும் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டே இருப்பர். இவர்களை அழிப்பதற்கு எந்த சமயவாதிகளும் துணிவடையமாட்டார்கள்… சமயங்கள் (மதங்கள்) தங்களுக்குள் பலவற்றில் வேறுபாட்டுடன் கூடிய கொள்கைகள் இருந்தாலும், இந்த தெய்வசக்தி-,தீயசக்தி விசயத்தில் ஒரே கருத்துடன் இருக்கின்றன.

சமயங்களின் அடிப்படை தன்மை, இந்த தெய்வசக்தி-தீயசக்தி கொள்கையிலேயே வடிவமைக்கப் பட்டுள்ளன. இதற்காகத் தான் அவ்வளவு பெரிய புனித நூல்கள் உருவாக்கப்பட்டு அன்றாடம் அதில் உள்ள கோட்பாடுகள் மானுடத்திற்கு போதிக்கப்படுகின்றன.

மானுடத்தின் நற்செயல்கள் அனைத்தும் கடவுளிடமிருந்து பெறப்பட்டதாகும்…அதேபோல் தீய செயல்கள் அனைத்தும் தீயசக்திகளிடமிருந்து பெறப்பட்டதாகும். மதங்களும், சமயவாதிகளும் ஒருக்காலும் தீயசக்திகள் இல்லாத உலகத்தை உருவாக்க முடியாது. அப்படி தீயசக்திகள் இல்லாத உலக்கத்தை ஏற்படுத்திவிட்டால் சமயவாதிகளுக்கு எந்த பணியும் இல்லாமல் போய்விடும்.. கடவுளின் அடிப்படைப்பணியே தீயசக்திகளின் செயல்களைக் கட்டுப் படுத்துவதாகும். இந்தப் பணியையே கடவுளின் பெயரால் சமய சான்றோர்கள் செய்து கொண்டு வருகின்றனர்..

தீயசக்திகள் வாழுமிடங்கள் ;

அடர்த்தியான இடங்கள், மலை உச்சி, மரத்தின் உச்சி, பருவகாலசந்திப்புகள், அயன சந்திப்புகாலங்கள், மாதசந்திப்புகள், பட்ச சந்திப்புகள், நாளின் பகலிரவு சந்திப்புகள், கருக்கல் காலம், ஒன்றின் தொடக்ககாலம், தலையின் உச்சிமண்டை. வீட்டின் வாசல் நிலை, படிக்கட்டுகள், வீட்டின் மூலைகள், தெருமுனைகள், முச்சந்தி, நாற்சந்திகள், பாழடைந்த கட்டிடங்கள், முற்றுப்பெறாத பகுதிகள், ஒழுங்கற்ற இடங்கள் போன்றவை தீயசக்திகள் வாழுமிடங்களாகும்.

அடர்த்தியான இடங்கள்;

பொதுவாக மரங்களும்,கொடிகளும்,செடிகளும் அடர்த்தியாக உள்ள பகுதிகளில் உள்ளே நுழைவதற்கு நமது மனம் எவ்வளவு அச்சப்படுகிறது என்று அப்பகுதிகளுக்கு சென்றவர்களுக்கு நன்கு விளங்கும்… நிச்சயமோ, இல்லையோ அப்பகுதிகளில் தீயசக்திகள் இருக்கலாம் என்ற அச்சம் நம்மிடம் இருக்கிறது.

அதனாலேயே வனக்கோயில்கள் இங்கு உருவாக்கப் பட்டன. இங்குள்ள தீயசக்திகள் அனைத்தும் எனது கட்டுப்பாட்டில் உள்ளன. எவரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்ற நோக்கில் கோயில்கள் கட்டப்பட்டன.

மலை உச்சி ;

மலை உச்சியில் எல்லாம் ஏறாதீங்கய்யா. அங்கே தீயசக்திகள் வாழ்கின்றன. அங்கு நீங்கள் சென்றால் உங்களைப் பிடித்துக்கொள்ளும் என்று பெரியோர்கள் சொல்லக் கேட்டிருப்பீர்கள். மலைஉச்சி என்பது நிலப்பகுதியின் உயர்ந்த இடமாகும். அதற்கு மேல் வானமாகும். அதனால் மலையும் வானமும் சந்திக்கும் அந்த மலைஉச்சிப்பகுதி தீயசக்திகள் வாழுமிடமாகும்.

நண்பர்களே !!அதனாலேயே மலையின் உச்சியில் இறைவனின் கோயில்கள் கட்டப்படுகின்றன. மலையின் உச்சியில் உள்ள தீயசக்திகள் எனது கட்டுப்பாட்டில் உள்ளன. மக்கள் எவரும் பயப்பட வேண்டாம் என்ற நோக்கத்தில் தான் மலைகளில் அனைத்து சமயத்தினரும் கோயில்களைக் கட்டினர்….. ஆதி மானுடத்தின் கண்டு பிடிப்பாகும்..

மரத்தின் உச்சி;

வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்று ஆடுதென்று விளயாடப் போகும் போது சொல்லி வைப்பாங்கள்……(பட்டுகோட்டையார்) மரத்தின் உச்சிப்பகுதியும் வானமும் சந்திக்கும் இடம் மர உச்சியாகும். அந்த இடத்தில் தீயசக்திகள் வாழ்கின்றன…. எனவே அந்த மரத்தில் கோயில்கள் எழுப்பப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படும்..

மர உச்சியில் உள்ள தீயசக்திகளை விரட்டுவதற்கு மரங்களையே இறைவனாக்கி வழிபட்டு தீயசக்திகளின் அச்சத்தில் இருந்து விடுபடுவதாகும் .மரங்கள் எப்படி தெய்வமானது என்பதற்கு விளக்கம் இதுவாகும்…

பருவகால சந்திப்புகள் ;

கால பருவங்களை பின்னர் விளக்குவோம். இங்கு மங்கை பருவத்தை விளக்குவோம். ஒரு பெண் பூப்பெய்திவிட்டாள் என்றும் சடங்காகிவிட்டால் என்றும் கூறுகின்றனர்.. பெண்ணானவள் குழந்தைத் தன்மையிலிருந்து, குழ்ந்தை பெற்றெடுக்கும் தன்மைக்கு மாறிய காலம்,இரண்டு பருவங்கள் சந்திக்கும் காலம் தீயகாலமாகும்..இந்த காலத்தில் தீயசக்திகள் அப்பெண்ணை பிடித்துவிடக்கூடாது என்பதற்காக செய்யப்படும் சடங்கே பூப்புனித நீராட்டுவிழாவாகும்… அதனடிப்படையில் சில பேயோட்டும் தன்மையில் செயல்களை செய்வர். ருதுவான பெண்ணிற்கு பக்கத்தில் இரும்புகம்பி,உலக்கை, துடைப்பக்கட்டை பொன்றவையெல்லாம் எதற்கு வைக்கிறார்கள் என்று பெரிய பெண்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்……உங்கள் வீட்டு பெரிய அம்மையார்களிடம் ருது சடங்குகள் என்று எவற்றை செய்கிறீர்கள் என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்…..

இங்கிருந்து தொடங்கிய தீயசக்தியை விரட்டும் பணியே பின்னர் ஒவ்வொரு மாதமும் பெண்கள் மாதவிடாய் ஆகும் காலங்களில் உலக்கையுடன் பிரித்து வைத்திருக்க காரணமானது…. தீயசக்தியை ஓட்டுவதே நமது அன்றாடப் பணியாகும்.. ஆனால் அவை தனியாக பிரித்து பார்க்காமல் வேறு ஒன்றுடன் தொடர்பு படுத்தப் பட்டிருக்கும்.

அயனசந்திப்புகள்;

உத்தராயணகாலம் / தட்சினாயனகாலம் ஆகிய இரண்டு பருவ சந்திகளும் இறை வழிபாட்டிற்குரிய நாட்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு விழாக்கள் நடத்தப்படுகின்றன. இக்காலங்களில் வேறு எவ்வித வாழ்வியல் சடங்குகளும் செய்யப்படுவதில்லை.

மாதசந்திகள்;

ஒவ்வொருமாத தொடக்ககாலமும் இறைவழிபாட்டிற்குரிய நாட்களாக உருவாக்கப் பட்டு கோயில்களில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

பட்சசந்திகள்;

அமாவாசை / பௌர்ணமி நாட்கள் வளர்பிறை,தேய்பிறை சந்திக்கும் காலமாகும்.. இந்த இரு நாட்களிலும் இறை வழிபாடுகள் மட்டுமே செய்யப்பட்டன. முகூர்த்த விதிகளில் தீங்கான நாட்களாக பிரிக்கப்பட்டுள்ளன. தற்பொழுது சிலர் நிறைந்த அமாவாசைக்கு எந்த தீங்கும் கிடையாது என்று சில செயல்களைத் தொடங்குகின்றனர். உண்மையில் அமாவாசை நல்ல நாட்களின் வரிசையில் இல்லை….

நாளின் பகலிரவு சந்திப்புகள் ;

ஒருநாளின் இரவு பொழுது முடிந்து பகல் பொழுது தொடங்கும் காலம் சந்திகாலம் என்றழைக்கப்படுகிறது.அதேபோல் பகல் பொழுது முடிந்து இரவுபொழுது தொடங்கும் காலமும் அந்திசந்தி காலம் என்றும் அழைக்கப்படுகின்றது..இக்காலங்களில் தீயசக்திகளின் செயல்கள் அதிகமாக இருக்கும் என்பதால் இறைவனை வழிபாடு செய்ய வேண்டும் என்று விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கருக்கல் காலம் ;

கருக்கலில் புறப்பட்டு செல்லாதே!!! காத்து ,கருப்பு அடித்துவிடும் என்பது மூதுரையாகும்.. நன்றாக விடிந்த பின்பு சென்றால் எந்த தீங்கும் ஏற்படாது என்றனர். இந்த காத்து கறுப்பை விரட்டுவதற்காகவே இறைவழிபாடுகள் செய்யப்படுகின்றன.

ஒன்றின் தொடக்ககாலம் ;

எந்த ஒரு புதிய செயலும் தொடங்குவதற்கு இறை வழிபாட்டை தேர்ந்தெடுப்பதற்கு காரணம்,, தொடக்கத்திற்கும். தொடக்கமின்மைக்கும் இடைப்பட்ட சந்திகால தீயதன்மையை தவிர்ப்பதற்காவே  வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

தலையில் கை வைக்காதே !!

தலை நமது உடலின் மேற்பகுதியாகும். இந்த மேற்பகுதிக்கு மேல் விண்வெளி வந்துவிடுகிறது. அதனால் தலையும் விண்ணும் சந்திக்கும் இடம் என்பதால் தலையில் கை வைக்காதே என்றனர்..அப்பகுதியில் தீயசக்திகள் வாழுமிடமாகும். எனவே தலையில் கைவைக்காதே என்றனர்..

மனிதன் தனது தலையில்  தலைப்பாகை, குல்லா, தொப்பி, முக்காடு, போட்டுக் கொள்வதற்குரிய காரணம் என்னவென்றால் , தீயசக்திகளிடமிருந்து தன் முயற்சியில் காப்பாற்றிக் கொள்வதற்காக அணியப்பட்டதாகும். மாகாபாரதக் கதையின் படத்தில் கூட தலைக்கு வந்த தீயசக்தி ,தலைப்பாகையுடன் சென்றது..என்றனர்.

கோயில்களில் கொடுக்கப்படும் புனித தீர்த்தங்கள் தலையில் தெளித்து கொள்வதற்காக கொடுக்கப்படுகிறது..சில கோயில்களில் கும்பாபிசேகம் முடிந்தவுடன் கோபுர உச்சியில் இருந்து புனித நீர் அனைவரின் தலைகளிலும் தெளிக்கப்படும்….கிறித்துவ ஆலயங்களில் புனிதநீர் தலையில் தெளித்துக் கொண்டே செல்வார்கள். அதேபோல் புனித ஆற்றிலோ, கடலிலோ, குளத்திலோ குளிக்கும் பொழுது தலையை மூழ்கி குளியுங்கள் என்பார்கள்.. குளிக்கமுடியாத சிலர் அந்த புனிதநீரை தங்கள் தலையில் தெளித்துக் கொள்வதைக் காணலாம்.. இவ்வாறு தலையில் உள்ள தீயசக்திகளை விரட்டுவர்.

நாராயண பக்தர்கள் கோயிலுக்கு செல்லும் பொழுது தீர்த்தத்தை வாங்கி தலையில் தெளித்துக் கொண்டும், கண்டிப்பாக சடாரியை தலையில் வைத்த பின்னர் தான் புறப்படுவர்,.இவை தீயசக்திகளிடமிருந்து காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ள தன்மையாகும். மானுட தலை எப்படியெல்லாம் தீயசக்திக்ளிடமிருந்து காப்பாற்றப் படுகிறது என்று நன்கு விளங்கியிருக்கும்…… 

ஆண்டவனிற்கு மொட்டை போடுவதற்குரிய காரணமே இதன் அடிப்படையில் வந்ததாகும். தலையில் உள்ள முடிப்பகுதி வானமும்,மனிதனும் சந்திக்கும் இடமாகும். அங்கு தீயசக்திகள் தங்கியிருக்கலாம் என்ற நோக்கில் அவற்றை இறைவனிடமே சேர்த்து விடுவோம் என்ற அடிப்படையில் முடிகாணிக்கைக் கொடுக்கப்படுகிறது… இதுவே முழுமையான ஆன்மீகக் காரணமாகும்.. நமது உடலின் வேறு எந்தப் பகுதியும் சந்தி நிலையில் இல்லாததால் மற்ற எதையும் காணிக்கையாக கொடுக்கத் தேவையில்லை..

அதனாலேயே ஆன்மீகப்பெரியோர்கள் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் மொட்டை அடித்துக் கொள்வர்… மொட்டையடித்து முக்காடு போடுவதற்குரிய காரணமும் இதுவாகும்…. ஒரு சிலர் தலைபாகை வைத்து தலையை மறைத்துக் கொள்வர்…

கோயிலின் கோபுரம் உயரமாக கட்டப்படுவதற்கு காரணம் இதுவேயாகும். ஊரின் கோயில் கோபுரம் உயரமாக இருப்பதால் வானமும் கோபுரத்தின் உச்சியின் சந்திப்பு நமக்கு மேலேயே இருந்துவிடுகிறது. இறைவன் கோபுரத்தின் உச்சியிலிருந்து தீயசக்திகளை ஒடுக்கி நம்மை காப்பாற்றுகிறார். ஆதலால் கோயில் இல்லாத ஊரில் வாழாதே என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு நல்ல நாளில் கும்பாபிசேக விழா நடத்தப்பட்டு கோபுரத்தின் உச்சிக்கு புனித நீராட்டுவிழாவும் செய்யப்படும்….இவை தீயசக்திகளை விரட்டுவதாகும்….

வீட்டின் வாசல் நிலை ; 

வீட்டின் வாசல் நிலை என்பது .வீடும், வெளிப்பகுதியும் சந்திக்குமிடமாகும்..எனவே இந்த பகுதியில் தீயசக்திகள் குடி கொண்டிருக்கும் அதனாலேயே நிலையும் கதவும் சாமி படங்களாலும்.சுத்தப்படுத்தி பூஜை செய்வதாலும் தீயசக்திகள் அகற்றப் படுகின்றன. கொடுக்கல்,வாங்கல் – பேச்சுக்கள் போன்று எதுவானாலும் வீட்டின் நிலைக்கு இந்த பக்கமோ அல்லது அந்தப்பக்கமோ இருந்து செயல்படவேண்டும். நிலையை நடுவில் நிறுத்தி செயல்படக் கூடாது என்று கூறியுள்ளனர். இதன் பொருட்டே நாம் தினமும் வாசலை சுத்தம் செய்து கோலமிட்டு வழிபாடு செய்து வருகிறோம்.. ….

படிக்கட்டுகள், வீட்டின் மூலைகள்;

அனைத்துப்படிக்கட்டுகளும், உள்பகுதி, வெளிப்பகுதியை இணைக்கும் சந்திப் பகுதியாகும். இவை தீயசக்திகள் இருக்குமிடமாகும். ஆதலால் அங்கு அமராதே என்று கூறப்பட்டது. அதே போல் வீட்டின் மூலைகள் மூதேவி வாழுமிடமாகும். அதனாலேயே மூலையில் உட்காராதே என்று கூறுவர்…வீட்டின் மூலைகள்—வடக்கு+கிழக்கு போன்று அனைத்து திசைகளின் சுவர்களும் இணையும் சந்திப்பகுதியாகும். இந்த இடங்களில் தீயசக்திகள் வாழும் என்றுள்ளது..அதனாலேயே வீட்டின் அனைத்து மூலைகளிலும் தெய்வபூஜை முடிந்தவுடன் புனித நீர் தெளிக்கப்படும்.. படி பூஜை செய்வதும் இதன் அடிப்படையே ….

தெருமுனைகள், முச்சந்தி, நாற்சந்திகள்

தெருமுனைகளும்.முச்சந்திகளும், தீயசக்திகள் வாழுமிடமாகும். இங்கு ஒரு தெருவுடன் மற்றொரு தெரு சந்திக்கும் பகுதியாகும். எங்கு சந்திக்கும் தன்மையுள்ளதோ அங்கு தீயசக்திகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது..அதனால் தீயசக்திகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே அப்பகுதியில் இறைவன் வாழும் கோயில்கள் எழுப்பப்படுகின்றன..முச்சந்தியில் கோயில் கட்டுவதற்கு காரணம் இதுவேயாகும்… அங்குள்ள இறைவன் தீயசக்திகளை கட்டுபடுத்திக் கொண்டெ இருப்பான்..

பாழடைந்த கட்டிடங்கள், முற்றுப்பெறாத பகுதிகள், ஒழுங்கற்ற இடங்கள்

இவற்றில் தீயசக்திகள் வாழும் என்று பல திரைப்படங்களின் மூலமாக அறிந்திருப்போம். எனவே இவற்றைக்கட்டுப்படுத்தவும் இறைக்கோயில்கள் ஏற்படுத்தப்படும். அல்லது எந்த மானுடரும் வாழாத பகுதியாக மாறிவிடும்….

சந்தியாவந்தனம் ;

இந்துசமய வேதியர்களுக்கு தெய்வசக்தியை அழைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட வழிபாட்டு முறையே சந்தியாவந்தனமாகும்..ஒரு நாளின் பகலிரவு சந்திப்பு காலங்களான அதிகாலை கருக்கள் நேரமும், அந்தி சாயும் கருக்கள் நேரமும் ஆகும். இந்த காலங்களில் தீயசக்திகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் கடவுளை அழைத்து மக்களையும் உலகையும் காக்கும் பொருட்டு அன்றாடம் வழிபடும் ஒரு செயலாகும். சந்தியாவந்தனவழிபாடு இந்து சமய வேதியர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

எனவே வேதம் கூறும் வேதியர் அனைவரும் தினமும் இரு வேளைகள் சந்திவந்தனம் செய்யவேண்டும்…வேதியர்கள் அனைவரும் உலக நன்மைக்காக தங்களை அர்பணித்துக் கொண்டவர்கள். ஆதலால் அவர்களுக்கு மட்டும் இந்த சந்தியா வந்தனம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது…. தீயசக்திகளின் தாக்கம் கூடுதலாக இருக்கும் காலம் என்பதால் சந்தியாகாலம் தீய காலமாகும்…

பிரம்ம முகூர்த்தம் ;

பிரம்ம முகூர்த்தம் என்று வேதங்களிலோ அல்லது கிருஹ்ய ஸூத்திரங்களிலோ அல்லது முகூர்த்த நூல்களிலோ கூறப்படவில்லை…

இந்து சமயத்தை பொறுத்தவரை எந்த ஒரு சடங்கானாலும் பகலிலேயே செய்யப்பட வேண்டும் என்று விதியை ஏற்படுத்தியுள்ளது. வாழ்வியற் சடங்குகள் ,அதற்குரிய விதிமுறைகளைப் பின்பற்றி முறையாக ஸூரிய உதயத்திற்குப்பின்னர் நல்ல நேரங்களை தேர்ந்தெடுத்து செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.. எந்த ஒரு வாழ்வியற் சடங்கும் இரவு நேரத்தில் செய்யக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. அதனால் அதிகாலைக்கு முன்னர் செய்யப்படும் பிரம்மமுகூர்த்த சடங்குகள் சாத்திரத்தில் கூறப்படவில்லை…

எடுத்துக்காட்டாக இரண்டு சடங்குகளை இங்கு குறிப்பிடுகிறேன்…

1.கருப்பாதானச்சடங்கு; 

அக்காலத்தில் சிறு குழந்தை விவாகம் நடத்தப்பட்டது…அதனால் பெண் பருவமடைந்தவுடன் கணவன் –மனைவி உடல்சேர்க்கைக்காக கற்பாதானச்சடங்கு செய்யப்பட்டது. இரவிலே உடல் சேர்க்கை ஏற்பட்டாலும் செய்கின்ற சடங்குகள் பகலிலேயே செய்யப்பட்டன..

2,அந்தியேஸ்டி:

மானுடம் இறந்த பின்னர் செய்யப்படும் சடங்காகும். இறப்பு எப்பொழுது நடந்திருந்தாலும் சுடுகாட்டில் செய்யப்படும் சடங்குகள் பகலிலேயே செய்யப்பட்டன.
இவை போல் எந்த ஒரு சடங்கும் கடவுளை வேண்டி செய்யப்பட்டதாகும். அவை அனைத்தும் பகலிலேயே செய்யப்பட்டன.

காலச்சூழ்நிலையாலும், மக்கள் பெருக்கத்தினாலும், நல்ல புரோகிதர் கிடைப்பது அரிதானதாலும் இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தை விதி விலக்காக ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..

எனவே பிரம்ம முகூர்த்த நேரம் என்பது விதி விலக்கப்பட்ட முகூர்த்த நேரமாகும்…

மிக்க நன்றி..

Professor.Dr.T.Vimalan. Ph.D.

26 / 03 / 2015 .  

Saturday, 21 March 2015

காலசர்ப்ப தோசம் என்பதெல்லாம் தேவையற்ற அச்சமே-21 / 03 / 2015.


காலசர்ப்ப யோகம் / தோசம் என்பதெல்லாம் தேவையற்ற அச்சமே…….

அன்புடையீர் வணக்கம்…மீண்டும் உங்கள் அனைவரையும் எனது பிளாகில் சந்திப்பதில் பெறு மகிழ்ச்சியடைகிறேன்……

காலசர்ப்ப தோசம் அல்லது யோகம் என்று சமீபகாலமாக மக்களை அச்சுறுத்தி பரிகாரங்களையும், பலன்களையும் கூறிவருகின்றனர்..இச்செயல் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதாகும்………இந்த அச்சுறுத்தும் யோகம், தோசத்திற்கு அடிப்படையான கோள்கள் இராகு , கேதுவை பற்றி விவாதிப்போம்.

இராகு;  

சோதிட சாத்திரத்தில் இராகுவை ஒரு கோளாக பார்ப்பது கி.பி 10 ஆம் நூற்றாண்டிற்கு பின்னரே ஆகும். அதற்கு முன் இராகு என்பது கிரகணம் ஆகும். இராகு என்றால் கிரகணம் என்ற கூற்றும் உள்ளது. வால்மீகி எழுதிய இராமாயணத்தில் இராகு என்ற சொல் முழுவதும் கிரகணத்தைக் குறிக்கும் சொல்லாகவே எழுதப்பட்டுள்ளது…..அங்கு இராகு என்பது ஒருகோள் என்று எங்கும் எழுதப்படவில்லை. வராகமிகிரர், கல்யாணவர்மர்,ஸிரிபதி.போன்ற சோதிடர்கள் தங்கள் நூற்களில் இராகு,கேதுவை கோள்களாக குறிப்பிடவில்லை. பின்னர் வந்த சோதிடர்கள் இராகுவையும் கேதுவையு கோள்களாக்கி அவற்றுக்கும் பலன்களை கூறியுள்ளனர்.. 

வராகமிகிரர் தனது ‘பிருகத்சம்கிதா’ என்ற நூலில் பகுதி 5ல் இராகு என்ற தலைப்பில் கிரகணம் பற்றியும் அவை ஏற்படும் இராசிகளை கணக்கில் கொண்டு எந்தெந்த நாட்டிற்கு தீமைகள்,நன்மைகள் ஏற்படும் என்று கூறியுள்ளார்..இதில் இராகுவை பாம்பின் தலை என்றும், அதன் 180 பாகையை பாம்பின் வால் என்றும் குறிப்பிடுகிறார்…..கேது என்று கிரகணத்தை வராகமிகிரர் குறிப்பிடவில்லை…..

கேது;

கேது என்ற வார்த்தைக்கு சரியான வடமொழி பெயர் புகையாகும்….வானத்தில் தென்படும் வால்நட்சத்திரங்களே கேது (comet) என்று அழைக்கப்பட்டுள்ளன…கேது என்ற கோளை பழைய சோதிட அறிஞர்கள் எவரும் தங்களது நூலில் குறிப்பிடவேயில்லை…..வராகமிகிரரின்,  “பிருகத் சம்கிதாவில்” பகுதி 11 ல் On Comets என்ற தலைப்பில் வால்நட்சத்திரங்களைப் பற்றி குறிப்பிடுகிறார்…அந்த வால் நட்சத்திரங்களை கேது என்றே குறிப்பிடுகிறார். வால் நட்சத்திரங்கள் தோற்றத்தில் நீண்ட வாலுடைய புகை போல் தெரிந்ததால் இவ்வாறு குறிப்பிடுகிறார். இந்த வால் நட்சத்திரம் தெரிந்ததால் உலகிற்கு நல்லது இல்லை என்றும் பலன்களாக உள்ளன…. 

எனவே கோள்களைக் கண்டுபிடித்த காலத்திலிருந்து இராகு,கேதுக்கள் என்ற கோள்கள் உருவாக்கப்படவில்லை……..கி.பி. 10 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் கிரகணப் புள்ளிகளை கோள் களாக உருவாக்கி பலன்களும் கூறிவருகிறோம்…இதனாலேயே பல அறிஞர்கள் வானத்தில் இல்லாத ஒன்றை கோள்களாக்கி அதற்கும் பலன்கள் கூறி ஏமாற்றுகின்றனர் என்று நம்மை வசை பாடுபவர்களும் உண்டு.

காலசர்ப்பதோசம் / யோகம்;

ஒருவருடைய சாதகத்தில் குறிக்கபடும் கோள்கள் இராகு,கேது என்கிற கோள்களுக்குள் இருந்தால் இந்த தோசத்தைக்கூறுகின்றனர்....................40 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட சோதிட நூல்களில் காலசர்ப்பம் என்கிற வார்த்தையே இல்லை….தற்பொழுது உள்ள நூல்களில் இவற்றைப் பற்றி எழுதி அதற்குப் பலன்களும்,பரிகாரங்களும் கூறி மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றனர். அதில் விஸேஸமாக ஒன்றைக்குறிப்பிடுகின்றனர். என்னவென்றால் 33 வயதிற்குப்பின்னரே இந்த சாதகம் வேலை செய்யும் என்கிறனர்….இதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை…..

யோகமும் / தோசமும் ;

எந்த ஒரு யோகமும், தோசமும் தனக்கென்று ஒரு காலவரையரை ஏற்படுத்திக்கொண்டு செயல்படுவதில்லை. அவை மானுடம் பிறந்த நாளில் இருந்தே செயல்படும் என்றுதான் நூல்களும் கூறுகின்றன. எல்லா யோகங்களும் பன்னிரெண்டு பாவகங்களுக்கும், தசா புத்திகளுக்குள்ளும் இருந்து தான் செயல்பட்டாக வேண்டும். எனவே நல்ல தசா புத்திகள் காலத்தில் யோகங்கள்,,, மரியாதையை ஏற்படுத்தி நன்கு வெளிப்படுத்தும். அதேபோல் தீய தசா புத்தி காலங்களில் யோகங்கள் நம்மை பெரிதும் பாதிப்பில்லாமல் காப்பாற்றும்……..

நல்ல தசா காலங்களில் தோசங்கள் பெரிதாக தெரியாமல் இருக்கும். தீய தசாகாலங்களில் பெரிதாக வெளிப்படும்…..இதை ஒரு பொழுதும் மாற்ற முடியாது……
நமது நாட்டில் ஒருவருக்கு நடைபெறும் நற்பலன்களை அவரது பொருளாதரத்தை வைத்து கணிக்கின்றனர்…..இது முற்றிலும் தவறானதாகும்.
ஒருவருடைய தாச புத்திகளில் 2 ஆம் பாவம் வேலை செய்யும் பொழுதே பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்…அப்பொருளாதாரம் யோக சாதகமாக இருந்தால் பன்மடங்காக பெருகியிருக்கும்….தோச சாதகமாக இருந்தால் சாதாரண நிலையில் இருக்கும்…

1 ஆம் பாவகத்தினால் தனது முயற்சியும்,பெயரும் விளங்கும்…
2 ஆம் பாவத்தினால் பொருளாதாரம் ஏற்படும்.
3 ஆம் பாவத்தினால் உழைப்பும்,
4 ஆம் பாவத்தினால் மகிழ்ச்சியும்,
5 ஆம் பாவத்தினால் அறிவும்,
6 ஆம் பாவத்தினால் கடன்களும்,
7 ஆம் பாவத்தினால் மற்றவர் தயவும்.
8 ஆம் பாவத்தினால் துன்பங்களும்,
9 ஆம் பாவத்தினால் ஒழுக்கமும்,
10 ஆம் பாவத்தினால் தொழிலும்
11 ஆம் பாவத்தினால் எண்ணம் நிறைவேறுதலும்
12 ஆம் பாவத்தினால் செலவுகளும் நடை பெற்று தான் ஆக வேண்டும்.

இது அனைத்து நல்ல யோகங்களுக்கும், தோசங்களுக்கும் பொதுவான தாகும்…..தோசங்களும்.யோகங்களும் தனக்கென்று தனியாக ஒரு நேரத்தை எடுத்துக் கொண்டு செயல்பட முடியாது..இதுவே சோதிடப்பலன்களைக்கூறும் முறையாகும்…..
ஆனால் கால சர்ப்பதோசத்தில் 33 வதிற்குப் பின்னரே பலன்கள் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். உண்மையில் எவ்வித ஆய்வும் செய்யாமல் தனக்கு தெரிந்தது போல் கூறும் முரண்பட்ட பலனாகும்…..

மற்றொரு வேடிக்கை என்னவென்றால், இந்த இராகு ,கேதுக்கள் தங்களுக்குள் உள்ள கோள்களின் செயல்களை செய்யவிடாமல் கட்டுப்படுத்துமாம்….அது எப்படி முடியும். அனைத்துக்கோள்களும் பன்னிரு பாவகத்திலும், இராசிகளிலும், நட்சத்திரங்களிலும் உள்ளன. இந்த இராகு,கேதுக்களும் இதில் அடங்கி உள்ளன… சோதிடப்படி கோள்கள் அனைத்தும் பாவகத்தின்படியே பலன்களைக் கொடுக்கும் என்றுள்ளது..
இப்படியிருக்க காலசர்ப்பதோசத்தில் உள்ள கோள்கள் இராகு, கேதுக்களின் பிடியில் இருப்பதால் செயல்படாது என்பதெல்லாம் சோதிடத்தின் அடிப்படை விதியை உடைப்பதாகும்… .உண்மையில் இவ்வாறு எல்லாம் தோசங்களைக் கூறி நாம் தான் மக்களை அச்சுறுத்தி வருகிறோம்…..

இராகு, கேதுக்கள் எந்த பாவத்தில் உள்ளனவோ அதற்கேற்றபடி செயல்படும்..அதேபோல் தன்னுடன் இணைந்த கோள்களின் செயல்களைக் கட்டுப்படுத்தி தனது வேலையைப் போல் செய்யும் என்று கூறலாம்….அதை விடுத்து ஏழு இராசிகளுக்குள் உள்ள கோள்களுக்கு பலன்களைக் கட்டுபடுத்தும் என்பதெல்லாம் சரியாக வருமா என்று தோன்றவில்லை.

வானத்தில் இல்லாத இராகு,கேதுவைக்கொண்டு பலன் கூறுகிறார்கள் என்று நம்மை கேவலப்படுத்தும் அமைப்பினர்க்கு இந்த காலசர்ப்பமும் எடுத்துக்காட்டாக அமையும்…

எதிர்காலத்தின் அறிவியல் வளர்ச்சிக்கு இந்த சோதிடவியல் சாத்திரம் தாக்கு பிடிக்க வேண்டுமென்றால் இராகு, கேதுவிற்கு கூறியுள்ள பலன்களே போதுமானதாகும். 

அதை விடுத்து பரிகாரப் பணத் தேவைக்காக புதிது புதிதாக தோசங்களைக் கண்டுபிடித்து கொண்டிருந்தோமேயானால் வெகு விரைவில் எதிர்காலம் நம்மை ஒதுக்கிவிடும்…..   

ஆய்வு  செய்யாவிட்டாலும் பரவாயில்லை. இருக்கிற சோதிடவியலை நாம் கெடுக்காமல் இருந்தால் போதும்…..

மிக்க நன்றி.

Professor Dr.T.Vimalan. Ph.D.
21 / 03 / 2015.


Wednesday, 11 March 2015

அயனாம்சமும்---சோதிடக் குழப்பங்களும்-#Ayanamsa -11-03-2015.


அன்புடன் அனைவருக்கும் வணக்கம். மிகுந்த இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் எனது பிளாகில் சந்திக்கிறேன்….
           
              அயனாம்சமும்---------சோதிடக் குழப்பங்களும்

நிலையான இராசி மண்டலத்திற்கும்( sidereal zodiac) , கோள்களின் சுற்றுப்பாதைக்கும்(Tropical zodiac) இடையில் உள்ள வேறுபாட்டு பாகையின் அளவைக்குறிப்பதே இந்த அயனாம்சமாகும்…

நிலையான இராசிமண்டலம்… 

அன்பர்களே நீங்கள் வானத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்களைப் பார்த்திருப்பீர்கள். அந்த நட்சத்திரங்களில் வெறும் கண்களுக்குப் புலப்படும் ஒளி மிகுந்ததை கோடுபோல் இணைத்து ஏற்படுத்தப் பட்டதே இராசிமண்டலமாகும்..இவற்றை ஏற்படுத்தி 2500 ஆண்டுகளுக்கு மேலாகும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது.. ஆனால் கி.மு 350க்கு முன்னர் கிரேக்கர்கள் ஏற்படுத்திய விலங்கின அடையாளங்களின் இராசி மண்டலத்தின் பெயர்களையே இன்றுவரை நாம் பயன் படுத்தி வருகிறோம்.. 

ARIES,TARUS,GEMINI,CANCER,LEO,VIRGO,LIBRA,SCORPIO,SAGITARIES,CAPRICON,AQURIES, PISES.ஆகிய இப்பெயர்களும் அடையாளங்களையும் உருவாக்கியவர்கள் கிரேக்கர்கள்ஆவர்.இந்த நட்சத்திரக்கூட்ட இராசி மண்டலம் நிலையானதாகும். எப்பொழுதும் நாம் வானத்தில் பார்க்கின்ற அதேஇடத்திலேயே இருக்கும்… இந்த இராசி மண்டலத்தையே 360பாகைகள் கொண்டதாக  பிரித்துள்ளோம் ஒவ்வொரு 30 பாகைக்கும் ஒரு இராசியாக பிரித்துள்ளோம். இதில் மேச இராசியை முதல் இராசியாக கணக்கில் கொண்டுள்ளோம். இது துலாராசின் சித்திரை நட்சத்திரம் (spica) தொடர்புபடுத்தி உருவாக்கியதாகும்…
( நான் வானசாத்திரத்தை முழுமையாக பயன்படுத்தப்போவதில்லை. .விளங்குவதும், விளக்குவதும் கஸ்டமாகும். ஆதலால் பாமரரும் புரியும்படி எழுதுகிறேன்.)

இந்த இராசி மண்டலத்தின் தொடக்கப்புள்ளியான 00.00.00 அளவு மேசராசியில் உள்ளது. இராசிமண்டலம் கோடிக்கண்க்கான மைல்களுக்கு அப்பால் உள்ளன. இதற்கு கீழ்பகுதியில் தான் கோள்கள் சுற்றி வருகின்றன.. அன்பர்களே இராசி மண்டலத்திற்கும், ஒவ்வொரு கோள்களுக்கும் இடைப்பட்ட தூரம் கோடிக் கணக்கான மைல்களாகும்… எனவே இராசி மணடலத்திற்கும்,கோள்களுக்கும் நிறைய இடைவெளி இருப்பதை புரிந்து கொள்க.

கோள்கள் மண்டலம் (வெப்ப மண்டலம்)

இப்பொழுது கோள்களின் மண்டலத்திற்கு வருவோம்.. சூரியனை மையமாக வைத்து நீள் வட்டப் பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும் கோள்களின் பாதையையே (TROPICAL ZOTIAC) என்கிறோம். இந்த சுற்றுப்பாதை நிலையானதாக இல்லை.. ஒவ்வொரு ஆண்டும் கோள்களின் பாதை மண்டலம் ஒரு குறிப்பிட்ட அளவு சாய்ந்து கொண்டே இருக்கிறது… இந்த பாதை கடக இராசியில் தொடங்கி மகரராசியில் முடியும்..

தற்பொழுது கோள்களின் வட்டப் பாதையின் தொடக்கப்புள்ளி மீன ராசியில் உள்ள 336 ஆவது பாகையில் உள்ளது.. ஒவ்வொரு ஆண்டும் கோள்களின் வட்டப்பாதை 00பாகை,00கலை, 50.29 விகலை சாய்ந்து கொண்டிருக்கிறது.

 கோள்களின் சாயன நிலை

இப்பொழுது இருக்கும் குழப்பம் என்னவென்றால் கோள்களின் வட்டப்பாதை எவ்வளவு விகலை சாய்ந்து கொண்டிருக்கிறது என்பதில் தான் உள்ளது. இதில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன..எவரும் முடிந்த முடிவாக கூற முடியாமல் உள்ளது..ஒவ்வொருவர் கண்டுபிடிப்பிலும் உண்மை இருப்பது போல் உள்ளது. நான் மேலே குறிப்பிட்டுள்ள அயானம்சம் என்.ஸி.லஹரி அவர்களுடையதாகும்..இவரைப்போல் நூற்றுக்கணக்கான அயனாம்ச விதிகள் நம்மைப் போட்டு குழப்புகின்றன…

நாம் திருக்கணிதத்திற்கு லகிரியின் அயனாம்சத்தையே எடுத்துக்கொள்வோம்.. இப்பொழுது கோள்கள் மேசராசியின் தொடக்கப்புள்ளியில் இருந்து 24 பாகை சாய்ந்து 336 ஆவது பாகையில் இருந்து தங்களது சுற்றுப்பாதையை தொடங்குகிறது…. இந்த சாய்ந்த நிலையில் இருந்து தொடங்கி நிலையான இராசி மண்டலத்தை கடந்து கொண்டிருக்கிற கோள்களின் நிலைகளை சாயன கோள்களின் நிலைகள் என்கிறோம்…  இந்த நிலையே வானத்தில் ஒரு கோள் சென்று கொண்டிருக்கும் உண்மையான நிலையாகும்.

சாயன நிலைகளில் உள்ள கோள்களின் அடிப்படையிலேயே மேற்கத்திய சோதிடப்பலன்கள்( WESTERN ASTROLOGY) கணிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் கோள்களின் வட்டப்பாதை தோராயமாக 00.00.53 விகலை அளவு சாய்ந்த கொண்டே  இருக்கிறது..இது நமது நிலையான இராசிமண்டலப் புள்ளியான மேசராசியில் இருந்து விலகிக் கொண்டே இருப்பதால் இதை சாயன நிலை என்கிறோம் இந்த ஆண்டு 24.00.00 பாகை சாய்ந்துள்ளது….

கோள்களின் நிராயன நிலை   

கோள்களின் சாயனநிலையில் உள்ள அளவுகளில் தான் நாம் வானத்தில் உள்ள இராசிகளில் கோள்களை அடையாளம் காணமுடியும்..ஆனால் நமது இந்திய பஞ்சாங்கங்களும், சோதிடமும் நிராயன நிலையில் கோள்களை கணக்கிடூ செய்து பலன்களைக் காண்கின்றது.

நிலையான இராசி மண்டலத்தின் தொடக்கப்புள்ளியை விட்டு சாய்ந்த நிலையில் தொடங்கும் கோள்களின் தொடக்கப்புள்ளியின் அளவைக் கழித்து(அயனாம்சம் அளவு) விட்டு பழையபடி இரண்டு தொடக்கப்புள்ளிகளையும் ஒன்றாக இணைத்து விடுகிறது. பின்னர் அதிலிருந்து கோள்கள் எந்த இராசியில் இருக்கிறது என்றுகணக்கிட்டு பலன்கள் கூறுவது நிராயன கணித முறையாகும்…

எடுத்துக்காட்டாக……..இன்று 11-03-2015 அன்று மாலை 5.00 மணிக்கு சந்திரனின்  நிராயன நிலை 210.03.58.ஆகும்.  ஆனால் சந்திரனின் சாயன நிலைக்கு 23.59.00 அளவை கூட்டினால் 234.02.58 வரும் இதுவே வானத்தில் சந்திரன் சென்று கொண்டிருக்கிற உண்மையான நிலையாகும்… இன்று அனுசம் நட்சத்திரம் 1 ஆம் பாதம் என்று கூறினாலும் உண்மையில் சந்திரன் கேட்டை மூன்றாம் பாதத்தில் சென்று கொண்டிருக்கிறது..

நிராயன கணிதத்திற்காக கோள்களின் சாய்ந்த அளவான அயனாம்சத்தைக் கழித்துக் காணும் கோள்கள் நிலையே நிராயன கோள்கள்நிலையாகும்..

இது மேசராசியின் 00.00.00 அளவில் மீண்டும் கோள்கள் நிலைகளைக் கொண்டு வருவதாகும்.. இப்பொழுது ஓரளவு புரிந்திருக்கும் என்று கருதுகிறேன்…

சாயனம் என்பது கோள்களின் வட்டப்பாதையின் தொடக்கம் மேசராசியின் தொடக்கத்திலிருந்து விலகிய நிலையாகும்…நிராயனம் என்பது சாய்ந்த நிலையை பழையபடி மேசராசிப்புள்ளிக்கு கொண்டு வந்ததாகும்….
சாயனம்- நிராயனம் ஆகிய எந்த ஒன்றில் கோள்கள் சென்று கொண்டிருக்கின்றன என்பது தங்களுக்கு நன்கு புலப்படும்……..

(பூமியில் இருந்து பார்ப்பதால் கோள்கள் மேசராசிப்புள்ளியில் இருந்து சாய்ந்துள்ளது போல் இருக்கும்.ஏதாவது ஒரு கோளில் இருந்து பார்த்தால் பூமி சாய்ந்தது போல் இருக்கும்....வான சாத்திரம் அதிகம் பயன்படுத்தாமல் இவ்வளவு தான் எளிமையாக என்னால் விளக்க முடியும்..)

இந்திய சோதிடமுறை நிராயன மண்டலத்தில் கோள்களை நிறுத்தி பலன்கள் கூறுவதாகும்..
மேற்கத்தியமுறையில் சாயன மண்டலத்தில் கோள்களை நிறுத்தி பலன்கள் காணப்படுவதாகும்……


மிக்கநன்றி……
Professor.Dr.T.Vimalan.Ph.D.
11-03-2015.